பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

111

இயற்கை. எடுத்துக்காட்டாக நிலத்தில் ஒரு காலத்தில் நான்கு கால்களால் நடமாடிய திமிங்கிலம், நீரில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், அதன் நான்கு கால்களும் கூம்பிக் கூம்பி நீந்துவதற்கு ஏற்றதுடுப்புகளாக உருமாற்றம் பெற்றன. மனிதனும் இப்படி மாறலாம். திமிங்கிலத்தின் முன் துடுப்பு எலும்பும், மனிதனின் முன் கை எலும்பும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதே இதற்கு அத்தாட்சி. ஆகையால், தமிழன் உருமாறுவதற்கு டார்வின் குறிப்பிட்ட அந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பம் என்பது எது என்பதை வரலாற்றுப் பேராசிரியர் விளக்கினால் விடை கிடைக்கும்.' சேர்மனின் கண்ணசைப்பை ஏற்று வரலாற்றுப் பேராசிரியர் ஜனாப்மியான் விளக்கமளித்தார். அந்தக் காலத்துப் பத்திரிகைகளையும், ஃபிலிம்களையும், கவிதைப் புத்தகங்களையும் பார்த்தபடியே பேசினார். 'இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால், தமிழர் பண்பாடு தனிநபர் வழிபாடாக, துதிப்பாடலாகவே இருந்திருக்கிறது. கவிதைகள், தலைவர்களின் கால்களில் சரஞ்சரமாய்க் கொட்டப்பட்டன. ஒருவனை வீரனாக்க, முப்பது பேரைப் பேடியாக்கும் சினிமாத்தனம் இருந்திருக்கிறது. தலைவர் காலில் குனிந்து விழுந்தால் நேரமாகும். அவருக்கும் கோபமாகும் என்று தமிழர்கள், தொப்பென்று நெடுஞ் சாண்கிடையாக விழுந்ததாகப் பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. இன்று தவழ்ந்தபடியே உயிர் வாழும் இவர்களின் மூதாதையர்களின் வாழ்க்கை முறை பற்றி விசாரித்தபோது, அவர்கள் அமைச்சர்களாகவோ, அரசியல் வாதிகளாகவோ, அரசு அதிகாரிகளாகவோ அல்லது உயர் போலீஸ் அதிகாரிகளாகவோ இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது... அப்படி அவர்கள் இருந்த சமயத்தில்,