ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
125
'சூட்கேஸ்பேசுது... அந்தம்மா பேசல...' 'நடுவர் குழு காவடி முருகன் குழு வெற்றி பெற்றதாய் அறிவிக்கணும்... இல்லாட்டால் விசயம் விபரீதத்தில் முடியும்.' 'மாற்று... மாற்று... முடிவை மாற்று...' மாவட்ட அமைப்பாளர்கைகளைப் பிசைந்தார். பி.ஏ.டு கலெக்டர்கள் காணாமல் போனார்கள்... சட்டம், ஒழுங்கு பாதிக்குமோ என்று பயந்து போன கான்ஸ்டபிள்கள் லத்திக் கம்புகளை கையில் பிடித்து, பயங்கரவாதிகளாய்ப் பார்த்தார்கள்... ஒரே குழப்பம். என்ன நடக்குமோ என்ற கலவரப்பார்வை... இதற்குள் நடுவர் குழுவின் எஞ்சிய இரண்டு உறுப்பினர்கள், அந்தம்மாவின் இரண்டு காதுகளிலும் கிசுகிசுத்தார்கள். நேரு மைய அமைப்பாளர் அந்த குழுவிற்கு முன்னால் போய் மேஜையைத் தட்டித் தட்டிப் பேசினார். கம்புகளை கழட்டி போட்டுவிட்டு சுயகாலில் நடந்து வந்த ஒரு கெக்கலி இளைஞன், "எங்களுக்கு பரிசே வேண்டாம்... இப்படி பாடாப் படவும் வேண்டாம்... எங்களுக்குத் தேவையில்லை' என்றான். அங்குமிங்குமாய் சங்கடமாய்ப் பார்த்த அந்த அம்மா எழுந்தார். முகத்தில் இப்போது லேசாய் சலனம். நடுவர் சகாக்களிடம் மீண்டும் கீழே உட்கார்ந்து கலந்து ஆலோசித்து விட்டு, மைக் முன்னே வந்தார். புதிய முடிவா... பழைய ஏற்பாடா... புதிய முடிவென்றால் அதற்கு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறார்... பழைய ஏற்பாடே என்றால் எப்படி சமாளிக்கப் போகிறார்... எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தமாகக் தோன்றக் கூடிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பாரா... மாட்டாரா...