உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சு.சமுத்திரம் ❍

இவர்கள் வந்திருப்பது அவர்களுக்கு தெரியுமோ... என்னமோ... மயில்நாதன், கலிங்கனின் காதைக் கடித்தார்... அவனை, அந்தக் கதவுப் பக்கமாகத்தள்ளிவிட்டார். அவனோ கதவைத் திறக்க போவதும், அன்பு வேந்தன் முறைத்த முறைப்பில் திறக்கப்போன கைகளை இழுத்துக் கொள்வதுமாக இருந்தான். ஒரு தடவை கதவை திறந்துவிட்டு அங்கே என்ன கண்டானோ... உடனடியாய் மூடிவிட்டான். என்ன செய்யலாம் என்பதுபோல் அன்புவேந்தனின் அருகே போனான். அவனோ இவன் காதில், 'போயும் போயும் இந்த மெண்டல்தானடா உனக்குக் கிடைத்தான் என்று மயில்நாதனைப் பார்த்து முணு முணுப்பதுபோல் இருந்தது. மயில்நாதனுக்கும் இது புரிந்திருக்க வேண்டும். அதற்குமேல் அங்கிருக்க அவருக்கு பிடிக்கவில்லை. இதற்குமேல் இருப்பது தன்னையே அடமானம் வைப்பதுபோல... அவர் எழுந்து அறையில் குறுக்கும், நெடுக்குமாய் நடந்து, ஒரு முடிவுக்கு வந்தவராய் வெளிக் கதவை திறந்து, வெளியேறப் போன போது-

திடீரென்று தாமரைப் பூ வடிவமைப்புகள் பதிக்கப்பட்ட தேக்கு கதவு திறந்தது. நடிப்புப் புயல் சந்திரபிம்மனும், 'இயக்குநர் செம்மல் அரூபசொருபனும் வெளிப்பட்டதும் கதவு மீண்டும் பூட்டிக் கொண்டது. நடிப்புப் புயலுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். கைத்துப்பாக்கி போட்ட டிசைன் சட்டை போட்டிருந்தார். ஒப்புக்கு சட்டையின் நடுப்பக்கம் மட்டும் பட்டன்மாட்டப்பட்டிருந்தது. மற்றபடி நிர்வாணமான மார்பு... சினிமாவில் தெரியும் உருண்டையான மார்பு, இங்கே தட்டையாகத் தெரிந்தது. ஆனாலும் இருபத்தேழு பவுன் டாலர் சங்கிலி டாலடித்தது. களையான முகம்... அசட்டையான பார்வை... அவர் பக்கத்தில் டைட் பேண்ட் போட்டு, அதற்குள் பனியன்