பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

147

நம்ம பொன்னனையே சண்டைக் காட்சியில் டுப்பா போட்டுடலாம்... இந்த சண்டை காட்சிகளை பாத்துட்டு ‘சி’ கிளாஸ் ஆடியன்ஸான ஒங்க தொண்டர்கள் கட் அவுட் வைப்பாங்க... கற்பூரம் கொளுத்துவாங்க... அப்புறம் என்ன... அடுத்த முதலமைச்சர் நீங்கதான்."

'இயக்குநர் செம்மல் அரூபசொருபன், அன்பு வேந்தனை இறுமாப்பாய் முறைத்தபடியே மூச்சுவிட்டபோது, நடிப்புப்புயல், அப்போதே முதலமைச்சர் ஆகிவிட்டதுபோல், தலைகள் விழுவதற்கு வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டினார்.

எழுத்தாளர் மயில்நாதன் எழமுடியாமல் எழுந்தார். கால்கள் தலையை கீழே இழுத்தன... தலை, கால்களை மேலே இழுத்தது. கண்கள் எரிந்தது. காதுகளில் இரைச்சல் கேட்டது... கால்மேல் கால்போட்டு நடந்தார்... துரவென்று வந்த ஒத்த வார்த்தையை எச்சிலோடு உள்ளடக்கிக் கொண்டார்... சட்டைப்பைக்குள் வைத்த பத்தாயிரம் ரூபாய் நோட்டு கத்தையை, கைகளை கட்டிக் கொண்டு நின்ற அரூபசொருபனின் கை விளிம்பிற்குள் திணித்துவிட்டு கோபத்தை மெளனமாக்கி வெளியேறினார். திரும்பிப் பார்த்தால், கண்களுக்கு தீட்டுப்பட்டு விடும் என்பதுபோல் கண்கள், கால்களைப் பார்க்க, கால்கள் உடம்பை நகர்த்த அவர் உஷ்ணத்தோடு வெளியேறினார். அந்த உஷ்ணமே நெஞ்சச் சுரப்பை ஆவியாக்கி கண்ணிராய் கொட்டப் போனது.

வாச்சாத்தி மக்களுக்காக மனதிற்குள் அழுதவர், இப்போது தமிழகமே ஒரு வாச்சாத்தி ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் வெளிப்படையாகவே அழுதார்...

-தினமணி கதிர்- 15.10.95