பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சு.சமுத்திரம்❍

அவதாரம் போல், படர்ந்த தலையும், விரிந்த குழலுமாய் செக்கச் செவேலென்று, ஜெக ஜோதியாய் மின்னியது. அம்மனின் காலடியில், முக்கனிகள்; வாழைப்பழக் குவியல்மேல், இயல் தமிழ் என்ற போர்டு... மாங்கனிக் குவியலில் இசைத் தமிழ் என்று எழுதப்பட்ட அட்டை... பலாப் பழத்தில் நாடகத் தமிழ் என்று ஒட்டப்பட்ட காகிதம்.. வேகமாய் எழுந்த சாம்பிராணி புகைமேகங்கள், ‘மந்திர முழக்கங்கள், மணி மணியான பாடல்கள். புகைந்து கொண்டிருந்த ஊதுபத்திகள்.

எல்லாவற்றிற்கும் மேலாய், அதிசயத்தின் அதிசயமாய் அற்புதத்தின் பேரற்புதமாய், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இடைவெளி இல்லாமல் சேர்த்து வைத்திருந்த இரண்டு கரங்களின் சேர்க்கையில் இருந்து குங்குமம் கொட்டியது. இடையிடையே விட்டு விட்டும், சிற்சில சமயங்களில் விடாமலும், கொட்டிக் கொட்டி, அம்மையின் பாதாந்திர விந்தத்தில் விழுந்து கொண்டிருந்தது. பக்த கோடிகள் முண்டியடித்து அந்த குங்குமம் கேட்டு அலை மோதினார்கள். முன்பக்கம், அர்ச்சர்களுக்கும், ஒதுவார்களுக்கும் மத்தியில் நின்ற ஒரு காவிவேட்டிசுவாமிகள், பரவசமாய் பரபரப்பாகி, ஆதி சங்கரர் அருளிய பூரீ செளந்தர்ய லஹரியை சர்வ சாதாரணமாய் நமது குங்கம நாயகிக்கு சமர்ப்பித்தார்.

'ஹே.. ஜெயலலிதாம்பிகே... எல்லாம்... உனக்கு அர்ப்பணம் என்ற சங்கற்பத்தில், நான் பேசவது உன் திருமந்திரச் சொல்லாகட்டும்! என் உடல் அசைவு, உன் முத்திரைகளாகட்டும்...என் நடை, உன் மாற்றரியா பிரசன்ன மாகவும், நான் உண்பதெல்லாம் உனக்குச் செய்யும் வேள்வியாகட்டும்! நான் படுப்பது, உனக்குச் செய்யும் வணக்கமாகவும், நான் இது மாதிரி என்னென்ன செய்தாலும், அவை உனக்குச் செய்த பூஜையாகட்டும்.....