பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சு.சமுத்திரம்

சரியாப் போச்சு...' 'அந்த கிராக்கு என்ன சொல்லிச்சு...' ஆனந்தவல்லி, கணவருக்கும் பதிலளிக்கவில்லை... அவர், சட்டைப் பித்தான்களை போட்டுவிட்டு, செருப்பை தேடிக் கொண்டிருந்தபோது, இவள் டில்லியில் காமாட்சி மாமி சொன்னதை, மனதில் அசை போட்டாள். இந்த பழனிச்சாமி, அண்டர் செகரட்டரியாக இருக்கும்போது, பலரோடு சேர்ந்து சார்ட்டட் பஸ்ஸில் போவார். அப்புறம் டெப்டி செக்கரட்டரியானதும் ஆபீஸ் காரில் காலையில் ஒன்பது மணிக்குப் போய், இரவு எட்டு மணிக்குத்தான் திரும்புவார். வீடு, அவருக்கு விருந்தினர் மாளிகை... ஆபீஸும் அங்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுமே, அவர் உலகம்... பால் வாங்குவதில் இருந்து, அமெரிக்க மகனுக்கும், பம்பாய் மகளுக்கும் சோடி சேர்ப்பது வரைக்கும், இவள் பொறுப்பானது... இதை, விரல்விட்டு, சுட்டிக்காட்டிய காமாட்சி மாமி, 'ஆனந்தி... ஒன் ஆத்துக்காரர் அசல் கிராக்... மெட்ராஸ்ல இப்போ... அக்கிரமம் அதிகமாயிட்டாம்... ஒன்னுடையவரால.... தாக்குபிடிக்க முடியாது... அவரோட அடாவடிய இங்குள்ளவங்க ஒன் முகத்துக்காக விட்டுக் கொடுக்காங்க... அங்கே அப்படி இல்ல... பேசாமல், இங்கேயே செட்டிலாயிடு' என்று சொன்னதின் தாத்பரியம், இப்போதுதான் ஆனந்தவல்லிக்கும் புரிந்தது. இந்த பழனிச்சாமி கேட்டால்தானே... பழனிச்சாமி, மனைவி அழாக்குறையாய் நீட்டிய சாவியை வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோது, ஆனந்தவல்லியால் பொறுக்க முடியவில்லை. நான் சொல்வதைக் கேளுங்க... போர் வாட்டர் இருக்கவே இருக்குது'