உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 சு.சமுத்திரம்

டூரிஸ்ட் பஸ்ஸை நிறுத்து... கொஞ்சம் தள்ளி... ஒதுக்குப் புறமாய் நிற்கச் சொல்லு...'

பழனிச்சாமி, தலையைப் பிடித்துக் கொண்டார். அதற்கு பிரதிபலனாக, உடனடியாய் ஒரு திட்டம் உதித்தது... இவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த நவரத்தினம், போலீஸ் கமிஷனர் ஆபிஸில் பெரிய போலீஸ்... அவருக்கு, டெலிபோனில் சொன்னால், பறக்கும் படை வரும்... ஸ்கூட்டரை நிறுத்தியதைவிட, இந்த பகல் வேட்டையையே முக்கியப்படுத்திப் பேசணும்... டேய்... பசங்களா... இருங்கடா இருங்க...'

பழனிச்சாமி, ஓடாக்குறையாய் நடந்தார்... ஒரு செவ்வகக் கண்ணாடி அறைக்குள் நடந்தார்... அதன் மேல் "எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி, பி.ஸி.ஓ என்ற ஆங்கில எழுத்துக்கள் மஞ்சளாய் ஜொலித்தன. எதிர் பக்கம் நாற்காலியில் ஒரு அழகான இளம்பெண்... அவள் முன்னால், தப்புத் தப்பாய் அழைக்கப்படும் "கம்ப்யூட்டர்"... அவளின் இடது பக்கம் 'ஷிப்டுக்கு' வந்த ஒருத்தன். அவளுக்காக வந்த இன்னொருத்தன்...மறு பக்கம் டெலிபோன்...

அந்த இளம்பெண், பழனிச்சாமியை, டயல் செய்ய விட்டாள். அவரும் பேசினார்.

'ஹலோ. . . ஹலோ. . . மிஸ் டர். . . நவரத்தினம் இருக்காரா... நானா நான் அவரோட கிளாஸ்மேட்... பழனிச்சாமின்னு சொல்லுங்க... தெரியும்... ஓ.கே... வெயிட் செய்யுறேன்... என்ன... மீட்டிங்ல இருக்காரா... ஒங்க கிட்டயே சொல்லணுமா... சொல்றேன்... சொல்றேன். என்ன ஸார் அக்கிரமம்... உங்க டிராபிக் போலீஸ் அசல் பணவேட்டை நடத்துறாங்க ஸார். இதோ இப்ப கூட நடக்குது...