உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

57

சாலையில், கால் போன போக்கில், நடந்தார். மனமே, அற்றுப்போன சூன்ய நிலை... உடம்பே காணாமல் போன அரூவ நிலை...

பழனிச்சாமிக்கு, எந்த இடத்தில் நடக்கிறோம் என்பது புரியவில்லை... தலை, பம்பரமானது... இருதயம் மத்தள மானது... சில நிமிடங்களில், அந்த குளிரிலும் உடம்பு வியர்த்தது... மார்பும், முதுகும், ஒன்றை ஒன்று பிய்த்துக் கொள்வது போல் வலித்தன... சொல்ல முடியாத வலி. நரம்புகள் தொய்ந்து கொண்டிருந்தன. வாயில் நுரையும் ரத்தமுமாய்... நல்ல தண்ணீரும் சாக்கடையும் கலந்தது மாதிரி. டெலிபோன் போல், மூச்சு கட்டாகி, முகமோ, கோணல் மாணலாகி...

பழனிச்சாமி, புரிந்து கொண்டார். ரத்த அழுத்தம் கூடிவிட்டது. சர்க்கரை அளவு ஏறிவிட்டது. இதன் எதிர் விகிதாச்சாரத்தில் இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருக்கிறது-இந்த நாட்டைப் போல...

பழனிச்சாமி, "ஆனந்தம்மா... ஆனந்தம்மா..." என்று அரற்றியபடியே, தரையில் சாய்ந்தார். காலற்று விழுந்தார். மூச்சற்றுப் போனார்.

இந்த பழனிச்சாமி, செத்ததே செத்தார், இன்னொன்றை தெரிந்து வைத்துக் கொண்டாவது செத்திருக்கலாம். அதாவது, இவரது சடலத்தை, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, ஆஸ்பத்திரியில் இருந்து எடுப்பதற்குக் கூட, 'அன்பளிப்பு' கொடுக்க வேண்டும் என்பது, சமூகச் சிலுவை சுமந்த பழனிச்சாமிக்குத் தெரியவே தெரியாது.

—ஆனந்த விகடன்