பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



84

சு.சமுத்திரம்

இந்த ஆறு மாதமாக நடக்காத சங்கதி. சொல்லி வைத்ததுபோல் ஒருத்தர் பின் ஒருத்தராய் வந்து எதுக்காக இப்படி வம்புக்கு வரவேணும்? இதுவரை பார்த்தறியாத முகங்கள் இப்போது ஏன் எதிரி முகங்களாய், பரம்பரை பரம்பரையாய் பகைமை கொண்ட முகங்களாய்ப் பார்க்க வேண்டும்? என்ன இது ஒரே மூடுமந்திரமாய் இருக்கே... செல்லையா சிந்தித்துச் சிந்தித்து தலைக்குள் ஏதோ வீங்குவது போல் தோன்ற, அப்படியே மனைவியின் மடியில் குப்புறப்படுத்தான். அப்போது வீட்டுக்கு முன்னாலேயே ஒரு கோரக்குரல். காக்கி யூனிபாரத்திற்குரிய கரடுமுரடான குரல். அந்தக் குரல் ஒலியின் வேகத்திற்கு ஏற்ப லத்திக் கம்புகள் சிலம்பாட்டம் போட்டன. "யோவ்..நீ தான் செல்லையாவா?” "ஆமா சார்...ஆமா..என்ன வேணும் சார்....” "செய்யறதையும் செய்துவிட்டு திமுறப்பாரு...' சார் இது ஜனநாயக நாடு....' வெளியே நின்ற போலீஸ்காரர்கள் மேற்கொண்டு பேசவில்லை. வாரிச்சுருட்டி எழுந்த செல்லையாவை ஒருவர் முடியைப் பிடித்து மாட்டின் மூக்கணாங்கயிற்றை இழுப்பது போல் இழுத்தார். இன்னொருத்தர் அவன் குதிகால்களுக்கு லாடம் போடுவது போல் லத்திக்கம்பால்தட்டினார். 'நடடா ஸ்டேஷனுக்கு..நாயே" என்றார். அந்தப் பஜார் வழியாகத்தான் அவன் நடத்தப்பட்டான். பல கண்களில் பரிதாபம் குடிகொள்ளத்தான் செய்தன... கோபம்கூட ஏற்பட்டது. ஆனால், அத்தனையும் செல்லாக் கோபங்கள். செல்லையா மீது குற்றங்கண்டு, அதன் மீது பழிகளைப் போடும் கோபங்கள்.