பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


விடிந்தது. எதுவுமே நடவாதது போல் நடந்து கொண்டாள் ராதை.

எழுந்து உட்கார்ந்து சாவதானமாக வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த ராதையின் கணவன், வாய்க்காலுக்குப் போய் குளித்து விட்டு வந்த சிவராமனைப் பார்த்ததும் 'ஏது, நீங்க அதிகாலையிலேயே எழுந்து குளிச்சிட்டு வந்தாச்சு போலிருக்கே!' என்று அதிசயப்பட்டார்.

சாப்பிட்டு விட்டு அவர் ஆபீசுக்குப் போகும் முன்பு சிவராமன் அவரிடம் தீர்மானமாக அறிவித்து விட்டான்- 'இன்று மத்தியான ரயிலுக்கு ஊருக்குப் போறேன். அங்கே முக்கிய அலுவல்களிருக்கு' என்று.

அவருக்கு அவன் முடிவு திருப்தியே தந்தது. எனினும் ஒப்புக்குச் சொல்லி வைத்தார். 'ரெண்டு நாள் தங்கி விட்டுப் போகலாம். நீங்க என்னடான்னா இப்படி அவசரப்படுறீங்க சரி, போயிட்டு வாங்க!'

அவர் போனபிறகு ராதை சிரித்தபடி முன் வந்து நின்றாள். 'ஊம், ஊருக்கு போறிகளாக்கும்! ஏன்' இன்னுமொரு நாள் இருந்து விட்டுப் போங்களேன், என்றாள்.

அவன் பரபரப்போடு 'போதுமம்மா உபசாரம்! நான் போய் வருகிறேன்' என்று கூறினான். அவன் அப்படிச் சொன்ன தினுசு அவளுக்குச் சிரிப்பே தந்தது.

'நீங்க போனால் என்ன! பொங்கல் கழிச்சு ஒரு வாரத்திலே நான் அங்கு வந்து சேருவேன். அம்மா அப்பா கிட்டே சொல்லுங்க என்றாள் குறும்பாகச் சிரித்தபடி.

'நீ வரப் போறியா! எப்போ!'

'ஏன், அதுக்கு முன்னாலேயே எங்காவது ஓடிப்போகலாம்னு கேட்கிறேளா?' என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் ராதை தொடர்ந்து அவள் கணவன் சொன்னதைப் போலவே நடித்துக் கூறினாள்: 'ஐயோ பாவம், நல்ல மனுஷன்!'

அவளுக்கு அதிகம் சிரிப்பு பொங்கியது. சிரித்தாள். பண்ணையார் வீட்டுக் காளைகளின் கழுத்திலே கட்டியிருக்கும் மணிச் சலங்கைகளைக் குலுக்கி ஒலி எழுப்புவது போல, கலகல