பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு வீட்டின் கதை


நகரம் என்றும் கொள்ள முடியாத கிராமம் என்றும் தள்ளமுடியாத, - இரண்டின் 'லெட்சணங்களை'யும் தன்னிடம் கொண்டிருந்த-அந்த ஊரின் மேலக்கோடியில் தனித்து நின்ற பெரிய வீட்டை மறுபடியும் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

'ஒத்தை வீடு என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த அந்த வீட்டுக்கு மீண்டும் யாரோ குடி வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது. சுவர்களுக்கு வெள்ளை பூசுவது, சன்னல்களுக்கு இளம் நீலவர்ணம் கொடுப்பது, உத்திரங்கள், மற்றும் கட்டைகள், கதவுகள் அனைத்துக்கும் வார்னிஷ் தடவுவது முதலிய வேலைகள் மும்முரமாக நடந்தன.

அந்த வீடு இத்தகைய 'மேக்அப்'களை ஏற்றுக்கொள்வது இதுதான் முதல் தடவை என்றில்லை.

பிரசார பலமும், செயல்திறமும் பெற்றுவிட்ட-செயலூக்கம் கொண்ட சிஷ்யர்கள், பக்தர்கள், வியப்பர்கள், பஜனையாடிகள், முதுகு சொறிஞ்சிகள் வகையினரையும் வசதியாகப் பெற்று விடுகிற-அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் எய்திவிடுகிற ஒரு அரும் பெரும் வாய்ப்பைப் பெறக்கூடிய தகுதி அந்த வீட்டுக்கும் உண்டு. ஆனால் அது வெறும் வீடு ஆகத் தனித்து நிற்கிறதே! ஆகவே, அதுக்கு நூறு வயசு ஆகி விட்ட போதிலும், நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடிய பாக்கியத்தை அந்த 'ஒத்தை வீடு' அடையவில்லை.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கால வெள்ளத்தில். நூற்றியொரு சிற்றலைகளின் மோதலை ஜீரணித்தபடி நிற்கும் அந்தப் பெரிய வீடு இப்பவும் உறுதியாகவே காட்சி தருகிறது. அதைப் பார்க்கிறவர்கள் 'அந்தக் காலத்துக் கட்டுமானத்தை'யும், பழங்காலக் கட்டிடங்களின் உறுதிப்பாட்டையும் புகழாமல் போவதில்லை.

'இப்பவும் கட்டிடங்கள் கட்டுறானுகளே! கட்டின மறுமாசமே கவர்களிலே விரிசல் கண்டு விடுது. பெரிய மழை பெய்தால் வீடு