பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் முடியும்? அம்மனுக்கு நாலு தேங்கா வாங்கி உடைக்கும்படி செய்தோம்" என்று ஒரு கிழவன் சொன்னான். "ஊர், கட்டுப்பாடு குலையப்படாது. அது முக்கியம்" என்று பிறவிப் பெருமாள் பொதுவாகச் சொல்லி வைத்தார். அது காலை உணவு நேரம். அதனால், வந்து நின்றவர்களுக் கெல்லாம் வயிறு நிறைய 'பழையச் சோறு' பரிமாறும்படி உத்திரவிட்டார். இட்டிலி, தோசை என்பதெல்லாம் விசேஷ நாட்களின் சிறப்புப் பொருள்களாகத்தான் கருதப்பட்டன. அந்நாட்களில். விரத நாட்களின் விசேஷத் தயாரிப்புகளாகவும் விளங்கின. அவை. இப்போது உள்ளது போல் சாதாரண நாட்களின் சர்வ சகஜ உணவுப் பண்டங்களாக அவை இருந்ததில்லை. நீராகாரமும், முந்திய தினம் தண்ணிர் விட்டு மண்பானையில் குளிரக் குளிரக் கிடக்கும் 'பழைய சோறும்', சுண்டக்கறியும்தான் எல்லா வீடுகளிலும் முக்கியமான காலைநேர உணவாக இருந்தது. பிறவிப்பெருமாள் பிள்ளை வீட்டில் இவை எந்நேரமும் தட்டில்லாமல் கிடைக்கும். "இப்ப எதுக்கு ஐயா சாப்பாடு?" என்று இழுத்தான் கூட்டத்தின் தலைமைக்காரன். "இந்த வீட்டுக்கு வாற யாரும் வெறும் வயித்தோடு போகக் கூடாது. அதிலும் நீங்க குளிர்ந்த வயிறோடும் நிறைந்த மனசோடும் போகணும். உங்களில் ஒரு ஆள்கூட வயித்தெரிச்சலோடு இங்கிருந்து நடை இறங்கப்படாது" என்றார் பிள்ளை. அவர்கள் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே, ஒருவனை அனுப்பி எரிந்துபோன வைக்கோல் படப்பின் சொந்தக் காரரை அழைத்து வரச் செய்தார். அவர் வந்து சேர்ந்ததும், "தம்பியா பிள்ளே, உம்ம வைக்கலின் கிரயம் இதோ இருக்கு. எடுத்து எண்ணிச் சரிபார்த்துக்கிடும்" என்று பெரிய பிள்ளை தெரிவித்தார். மற்றவர் பணத்தை எடுத்துக்கொண்டார். "நீங்க சொன்னால் சரிதான். அவங்களும் பொய்யா சொல்லப் போறாங்க" என்று முணுமுணுத்தார்.