பக்கம்:ஒரே உரிமை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

கிளி பேசுகிறது!


ஏன் தெரியுமா? அவர்கள் எனக்குப் பேசக் கற்றுக் கொடுத்தார்களாம்; நான் உடனே பேசக் கற்றுக்கொண்டு விட்டேனாம்!

என்ன அசட்டுத்தனம்! எனக்கிருந்த வெறுப்பில் நான் அவர்களுக்கு அழகு அல்லவா காட்டினேன்? அதற்குக் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக இப்படி ஆனந்தப்படுகிறார்களே!

இப்படி எண்ணி நான் வியந்து கொண்டிருந்த போது "அக்கா! இந்தக் கிளிக்கு இப்போது இறக்கைகள் வளர்ந்து விட்டன; கத்திரிக்கோல் கொண்டு வருகிறேன், வெட்டி விடுகிறாயா?" என்றாள் தங்கை.

எனக்குப் பகீரென்றது. "அடி பாவிகளா!" என்று சபித்தேன்.

நல்ல வேளையாக அக்கா அதற்கு ஒப்பவில்லை. "இறக்கைகள் வளர்ந்த பிறகுதான் கிளி பார்ப்பதற்கு அழகாயிருக்கிறது! அதை வெட்டிவிட்டால் அவலட்சணமாய்ப் போய்விடாதோ?" என்றாள்.

அப்பாடி! 'பிழைத்தேன்!' என்று நான் பெருமூச்சு விட்டேன்.

அந்தப் போக்கிரிப் பெண் அத்துடன் நிற்கவில்லை. "எனக்கென்ன, ஏமாந்தால் என்றைக்காவது ஒரு நாள் அது ஓடிவிடப் போகிறது!" என்று அவள் தன் அக்காவை எச்சரித்தாள்.

"ஏண்டி, இவ்வளவு நாள் நம்மிடம் வளர்ந்த பிறகு அது எங்கேயாவது நன்றி கெட்டதனமாக ஓடி விடுமா?" என்றாள் அக்கா.

ஐயோ, பாவம்! என்னையும் அவள் அந்தக் கேடுகெட்ட நாயுடன் சேர்த்துக் கொண்டாள் போலும்! இவளை நானா என்னிடம் நன்றி காட்டச் சொல்லி அழைத்தேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/152&oldid=1149460" இலிருந்து மீள்விக்கப்பட்டது