இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தன் கண்ணான மகளின் கரம் பிடிக்க வந்த கட்டிளங்காளையர்க்கெல்லாம் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான் மன்னன். இது விசித்திரமான கட்டளை மட்டுமல்ல. கொடுமையானதுங்கூட
"திருமணம் செய்து கொள்ளத் தயாராக வரும் இளைஞன், அந்த இளவரசியின் அந்தப் புரத்திற்குச் சென்று அவளைக் கவர்ந்து தன் தேரில் ஏற்றிக் கொண்டு நாட்டின் எல்லையைக் கடந்துத் தப்பி ஓட வேண்டும். பின்னால் துரத்தி வரும் மன்னன் சைகளில் அந்த இளைஞன் தப்பி விட்டால். திருமணம். சிக்கி விட்டால் மன்னன் கையிலுள்ள கூர் ஈட்டி அவன் மார்பில் பாயும். மணம் அல்லது மரணம் இது தான் அவனுக்குக் கிடைக்கும் பரிசு,'
பாராண்டவன் போட்ட நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பதின்மூன்று காளேயர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் பாதி வழியிலே பிடிபட்டு, பரலோகம் சென்றனர். ஆமாம்.... ஈட்டியை வீசி எறிவதில் எமனையும் விடக் கொடியவன் மன்னவன். போட்டியில் கலந்து கொண்டோர் அனைவரும் பயங்கரமாகக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டும் கேட்டும் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது...மக்கள் இதயத்தில் மயக்கம் சூழ்ந்தது. இளவரசியை மணக்க இனி யாரும் துணிய மாட்டார்கள்" என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் வந்தான். விளக்கினைத் தேடி வருகின்ற விட்டில் பூச்சியாக அவன் வருவதைக் கண்டு. பார்த்தவர்கள் பரிதாபப் பட்டார்கள். அவன் பெயர் பிலாப்ஸ்
அவன் வாலிபன் மட்டுமல்ல. கட்டுடல் கொண்டவன். கூரிய மதியும் வீரிய செயலும் கொண்டவன் போலவே தோன்றினான். இல்லையேல். பூக்காடு என்று எண்ணிக்கொண்டு சாக்காட்டை நோக்கி வேகமாக வந்திருக்க மாட்டானல்லவா?