பக்கம்:ஓங்குக உலகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஓங்குக உலகம்


என வெள்ளப்பெருக்கில் அதைப் போற்றி வழிபடுவதோடு ‘வந்தன்று வையைப்புனல்’ என்று வாழ்த்தி அதில் ஆடவரும் பெண்டிரும் திளைத்தாடும் விழாவினைப் பரிபாடல் பல விடங்களில் விளக்குகின்றது. இன்றும் காவிரிப் பெருக்கினைப் போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாட்டில் உண்டே! அரசர்தம் பிறந்தநாள் விழா, மண்ணுமங்கலம் போன்றவற்றை விளக்குகின்ற இலக்கியங்கள் பல. மேலும் வசந்த விழாவினை ஊர்தொறும் கொண்டாடிவந்த சிறப்பினை- முக்கியமாகப் பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழாவினைச் சிறப்பிக்கும் முகத்தான் ‘சித்திரைத் திங்கள் சேர்ந்த’ பெருவிழாவினை இளங்கோவடிகள் விளக்குகிறார். பின் வேனிற்காலத்து வேட்டுவர்தம் விழாவினையும் இடைக்குல மகளிர்தம் ஆய்ச்சியர் குரவையினையும் சேரநாட்டில் மலைக்குரவர்தம் குன்றக்குரவையினையும் காண்கின்றோம். இப்படி ஐந்திணையிலும் ஆற்றுப்பெருக்கிலும் கடற்கானலிலும் அவ்வந்நிலத்து மக்கள் ஆற்றும் விழாக்கள் இன்றும் தமிழ்நாட்டில் வற்றி விடவில்லை.

தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள். அவர்களுக்குத் திங்கள்தொறும் வரும் நிறைமதி நாளே விழா நாளாக அமைந்தது. சித்திரையில் கலந்த நிறைமதியும், வைகாசியில் விசாகமும், கார்த்திகையில் கார்த்திகையும், மார்கழியில் ஆதிரையும், தைப்பூசமும், மாசி மகமும், பங்குனி உத்திரமும் அத்தகைய நிறைமதி விழாக்களேயாகும். இன்றும் கடற்கரையிலும் ஆற்றுப்படுகைகளிலும் கலந்து, இந்த நிறைமதி விழாக்கள் கோயில்தோறும் ஊர்தொறும் நடைபெறுவதறிகிறோம். இவை தெய்வத் திருத்தலங்களில் இனிய பத்து நாட்கள் தொடர்ந்த பெருவிழாவென நடைபெறுகின்றன. இந்த நாட்களிலும் அவ்விடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/33&oldid=1127292" இலிருந்து மீள்விக்கப்பட்டது