பக்கம்:ஓங்குக உலகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு வி.க.சில நினைவுகள்

51


எடுக்கப் பெற்றது. பெரியார் வந்து சென்ற அன்று, அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் நானும் டாக்டர் மு.வ. அவர்களும் திரு.வி.க. வினைப் பார்க்கச் சென்றோம். அவர்களே இந்த முடிவினை எங்களுக்குச் சொன்னார்கள். இவ்வாறு பலவகையில் 1926ம் ஆண்டின் காஞ்சிபுர மாநாட்டிற்கு முன்பும் அதற்குப் பின்பும் தந்தையும் தாயும் பலவகையில் ஒன்றித் தமிழ் நாடும் தமிழ் மொழியும் தமிழர் நலமும் வாழப் பாடுபட்டனர். முன் தந்தையின் நூற்றாண்டு விழா நடந்து முடிவுற்றது. இன்று தாயின் நூற்றாண்டு விழா தொடங்குகின்றது.

திரு.வி.க. தமக்கென ஒன்றும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர். தன்னுடையது என்று எதையும் கூறிக் கொள்ளாதவர். கடைசிக் காலத்திலும் பலர் வலியவந்து உதவி செய்ய நினைத்த போதும் வேண்டாம் என விலக்கியவர். டாக்டர்.மு.வ. அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பாடநூல் குழு உறுப்பினராகவும், ரா.பி.சேதுப் பிள்ளை அவர்கள் தலைவராகவும் இருந்த காலத்தில் திரு.வி.க.விடம் நாங்கள் நேரில் சென்று, ‘தங்கள் நூல் ஒன்றினைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்க விரும்புகிறோம்’ என்று பலமுறை வற்புறுத்தி வேண்டினோம். ஆயினும் அவர்கள் இருக்கும் வரையில் அதற்கு இசைவினைத் தரவில்லை. அவ்வாறு பாடமாக வைப்பின் வரும் ஒரு சில ஆயிரங்கள் அவர்தம் கடைசிநாளில் பயன்படுமே என்று நாங்கள் செய்த முயற்சி பலன் தரவே இல்லை. ஆயினும் அவர் மறைந்த பிறகு நான் பாடநூற் குழுவின் தலைவராக இருந்தபோது அவருடைய ‘முருகன் அல்லது அழகு’ என்ற நூலைப் பாடமாக வைத்து மன நிறைவு கொள்ளவேண்டி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/54&oldid=1127349" இலிருந்து மீள்விக்கப்பட்டது