பக்கம்:ஓங்குக உலகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு

63


தமிழகத் தொழிலாளர் தலைவர்கள், தமிழகத் தொழிலாளர் தொண்டர்கள், சமூக ஊழியர்கள், பெண்கள் சங்கத்தலைவியர், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் அன்பர்கள், புலவர்கள், பல சமயத்தையும் சார்ந்த சான்றோர்கள், துறவிகள், இல்லறத்தார், அரசாங்க உயர் அலுவலர்கள், அமைச்சர்கள், நாட்டு வாழ்வில் நலம் காண விரும்பியவர், வீட்டுப் பிணக்கில் வேறுபாடு நீங்க விரும்பியவர் அனைவரும் அடிக்கடி வந்து அந்த அரச மரத்தின் கீழே அன்றாடம் திரு.வி.க.வுடன் கலந்து பேசி, தத்தம் செயலுக்கும் கருத்துக்கும் ஏற்ற ஆக்க அறிவுரைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். ஆம்! அவரைக் காணாதவர் எந்தத் துறையிலும் இலர் எனலாம்.

அவருடைய இறுதிக் காலத்தில் மிகத் தாழ்ந்து, இருந்த வீட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட போது, எதிர் வீட்டில் ஒண்டி இருந்தார். பலர் தங்களுடன் வந்து இருக்கக் கேட்டும் இசையவில்லை. பொன்னும் பொருளும் கொடுக்க முன்வந்தும் பெறவில்லை.

அவர் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளாத மக்களிலர். எல்லாக் கட்சிகளின் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறந்தன. யாத்திரையில் அவரவர் கொடிகளைத் தாங்கி எல்லாக் கட்சிகளும் கலந்துகொண்டன. பல தலைவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், தொண்டர்கள், இலட்சக்கணக்கில் கலந்து இறுதி வணக்கம் செலுத்தினர். அந்த யாத்திரை ஊர்வலம் வீடு தொடங்கி சுடலை வரையில் ஒரே தொடராக சுமார் 1½ கல் நீளம் இருந்தது என்பது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கினையும் அவர்கள் அவரிடம் காட்டிய மரியாதையினையும் விளக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/66&oldid=1127511" இலிருந்து மீள்விக்கப்பட்டது