பக்கம்:ஓங்குக உலகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

கட்டுரைகளையெல்லாம் கண்டு, ‘தாங்கள் புதிதாக எழுதாவிட்டாலும் இவைகளைத் தொகுத்து நூலாக்கலாமே’ என்றனர். அதுவும் சரி என்றே எனக்கும் பட்டது. உடனே சிலவற்றை ஆய்ந்து எடுத்துத் தொகுக்க நினைத்த போது சில அடிப்படைகளைக் கொண்டேன். கட்டுரைகளில் சிறிய அளவில் உள்ளவற்றை ஒரு நூலாகவும், பெரியவற்றை வேறு நூலாகவும் அமைக்கலாம் எனக் கருதினேன். அக்கருத்தின்வழியே இச் சிறு நூல் வெளிவருகின்றது.

இதில் இருபத்தைந்து கட்டுரைகள்-வெவ்வேறு காலங்களில் எழுதியவை-பேசியவை இடம் பெறுகின்றன. அனைத்தும் அளவில் சிறியனவாகவே உள்ளன. எனினும் ‘காகிதம் செய்வதிலும் அச்சுக் கலையிலும் சீன் நாட்டின் பங்கு’ என்ற கட்டுரை பெரியதாக-பதினாறு பக்க அளவில் நீண்டுள்ளது. இக் கட்டுரை எப்பொழுது-எதற்காக எழுதினேன் என்பது நினைவில் இல்லை. மேலும் இது யாருக்காகவோ ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப் பெற்ற ஒன்று எனவும் நினைக்கிறேன். எனவே இது என் உள்ளத்தெழுந்தது எனக் கூற முடியாது. மற்றவை அனைத்தும் அளவில் சிறியனவாகவே உள்ளன.

நான் ஆயுள் எல்லையில் முக்கால் நூற்றாண்டைக் கடந்து வாழ்கின்றவன். ஒருகால் அரசியலில் பங்கு பெற்று, தேர்தலில் வெற்றி பெற்றவன். 1937இல் இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலந்தொட்டு நாடாண்ட நல்லவர்களையெல்லாம் ஓரளவு அறிந்தவன். பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தபின் (1944) நான் முற்றும் அரசியலை விட்டு விலகினேன் என்றாலும், அரசியல் தலைவர்கள்-முதல்வர்களோடு தொடர்பு எப்படியோ இருந்துவந்தது. எனவேதான் இதில் நான் பழகிய முதல்வர்கள் பற்றிய கட்டுரைக்ள் இடம் பெறுகின்றன. அப்படியே நான் அறிந்த பெரும்புலவர் இருவர் இங்கே இடம்பெற்றுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/7&oldid=1127532" இலிருந்து மீள்விக்கப்பட்டது