பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


ஓடிச் சென்ற உமைபாலன் குழந்தையைக் கண்டு பதறி, ‘ஆ!’ என்று அலறினான். கழுத்துச் சங்கிலியைக் கழற்ற முனைந்த கிழவனைக் கீழே பிடித்துத் தள்ளினான்,

பூவழகி கதறினாள்.

கனபாடி கங்காதரமும் அவர் பிள்ளை கோபுவும் ஓடிவந்தார்கள். கிழவன் சாம்பானைக் கண்டதும், ஐயர் திகைப்புற்றார். “சரிதான் ... இந்த அப்பன் புத்திதான் மகனுக்கும் வந்திருக்குது! ...” என்று பற்களைக் கடித்தார். பற்கள் சில எப்படியோ, யார் செய்த பூஜாபலன் மூலமோ அவர் வசம் எஞ்சின.

கிழவன் சாம்பான் தலை முடியை முடிந்தான்; “டேய்... நீ யாருடா என்னைத் தடுக்க! ... இது யார் குழந்தையோ! இதிலே நீ ஏண்டா தலையிடுறே?.... போடா!...” என்று சீறினான் அவன்.

உமைபாலனின் உடல் முழுவதும் நடுங்கியது; ரத்தம் கொதித்தது. துடி துடிப்பு வளர்ந்தது. “ஏ கிழவா? நான் யாருன்னா கேக்கிறே? ... இது என் தங்கச்சிடா! .... இது என் சொந்தத் தங்கச்சிடா !... இது இங்கே எப்படி வந்திச்சு அப்படின்னு தான் புரியலே ...! எங்க சின்னம்மா இதை விட்டுப்புட்டு ஒரு செகண்ட் கூட இருக்க மாட்டாங்களே!” என்று விம்மினான்.

கிழவன் தலையை உயர்த்தி, “தம்பி, நீ யாரு...? அதை முதலிலே சொல்லு! ... ஹோட்டலிலே மேஜை துடைக்கிற உனக்கு இவ்வளவு பணக்காரத் தங்கச்சி எப்படி இருக்க முடியும்? ...” என்று அமத்தலாகக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/51&oldid=1319057" இலிருந்து மீள்விக்கப்பட்டது