பக்கம்:ஓ மனிதா.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடு கேட்கிறது

59


அதையும் ஒருவழிப்படுத்தி உதவினார் தீரர் வல்லபாய் பட்டேல். ‘அப்பாடா! உலகம் ஒரே உலகமாகா விட்டாலும் தேசமாவது ஒரே தேசமாயிற்றே, அது போதும்!’ என்று உங்களில் பலர் அன்று பெருமூச்சு விட்டீர்கள்.

அதற்கும் ஆபத்து வரும் போலிருந்தது, ‘ஏக இந்தியா’வுக்கு பதிலாக ‘அவியல் இந்தியா’ கேட்பவர்களிடமிருந்து. அதைத் தவிர்ப்பதற்காக வருடத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாளை ‘ஒருமைப்பாட்டு நாள்’ என்று குறிப்பிட்டு, பின்வரும் ‘பிரதிக்கினை’யை எடுத்து வருகிறீர்கள்.

‘நாட்டின் உரிமை வாழ்வையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வலுப்படுத்த நான் செயற்படுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். ஒரு போதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம், மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும், பூசல்களுக்கும், ஏனைய அரசியல். பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும், அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும், நான் மேலும் உறுதியளிக்கிறேன்.’

இப்படி உறுதிமொழி எடுத்த மறுநாளே நீங்கள் என்னசொல்கிறீர்கள்? ‘ஒருமைப்பாடாவது, ஒண்ணாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை; காஷ்மீரும் பஞ்சாபியும் ஒன்றாகிவிட முடியுமா? குஜராத்தியும் மராத்தியும் ஒன்றாகிவிட முடியுமா? வங்காளியும் தமிழனும் ஒன்றாகிவிட முடியுமா? அவரவர்களுக்கென்று தனி மொழி உண்டு: தனிக் கலாச்சாரம் உண்டு!’ என்று சொல்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/60&oldid=1370824" இருந்து மீள்விக்கப்பட்டது