பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஔவையார் தனிப்பாடல்கள்



சோழன்; வந்தவரை ஒளவையார் என்று அறிந்து கவனித்தானில்லை. அவன் மனமோ முந் நாளிற் கண்ட அந்த அதிசயக்காட்சியில் முற்றவும் நிலைத்திருந்தது. அதனாலேதான், அவருக்கு இருக்கை தருமாறு எவரையும் ஏவினானில்லை. எனினும், அவருடைய இப் பாடலைக் கேட்டதும், அவன் உள்ளம் தெளிந்து பூரிப்படைந்தது.

‘தெய்விக சக்தி உடையவர் போலும்! யான் நேற்றுக் கண்ட காட்சியை அங்ங்னமே உரைத்தனரே!' என வியந்து, அவரை அன்புடன் வரவேற்று உசாவினான். அவரே ஒளவையார் என்று அறிந்ததும், அவனுள்ளம் அளவிலா உவகை அடைந்தது. தான் கண்ட அந்த இனிய காட்சியைத் தன் அவையினர்க்கு உரைத்து, அதனையே அறிந்து உரைத்த ஒளவையாரின் ஞானச் சிறப்பையும் போற்றினான்.

"சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல்நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய, காவிரியாற்றாற் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்துரம் ஆகும். அங்ஙனம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ?” என்பது செய்யுளின் பொருள்.

கூனல் - சங்கு, நத்தை எனலும் ஆம்.

'கூனலுக்கும் கருந்தேன் கிடைக்கின்ற நாட்டிலே, புலவரான எனக்கு மட்டும் இருக்கவோர் இடம் கிடையாதோ? நின் அன்புப் பரிசிலும் வாயாதோ?’ என்ற குறிப்பையும் பாடல் கொண்டிருக்கிறது.

4. பகட்டுக்கு மதிப்பு!

ஒளவையார் சிறந்த நாவலர். எனினும், எளிமையினையே விரும்புகின்ற பண்பும் உடையவர். தம் கவிதையைப் போற்றிச், செல்வர்கள் உவந்து தமக்குப் பரிசளித்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆடம்பர நினைவு அறவே இல்லாதவர். மக்களொடு கலந்து தம்முடைய உள்ளத்திலே எழுகின்ற உணர்வுகளைக் கவிதைகளாக வடிக்க வேண்டும்; அதுதான் தமக்கு உவகை தருவது என்ற எண்ணம் உடையவர்.

அரசர்களால் உபசரிக்கப் பெற்றாலும், பரிசுகள் வழங்கிப் பாராட்டப் பெற்றாலும், அவர் மனம் உவப்படைவதில்லை.