உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

ஔவையார் தனிப்பாடல்கள்


"அரசவைக்குப் பரிசினை நாடி வந்துள்ள புலவரின் அருகே, தந்திரக்காரர்களாக இருவர் அமர்ந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புலவரது விரல்களுள் நிறைய மோதிரங்கள் விளங்க வேண்டும். அவர் இடுப்பிலே பஞ்சாடையோ பட்டாடையோ கவினுற விளங்குதல் வேண்டும். அங்ஙனமாயின், அவருடைய கவிதை நஞ்சுபோலப் பிறருக்குக் கேடு விளைவிப்பதானாலும், வேம்பினைப் போலக் கசப்புச் சுவையுடையதாக இருந்தாலும், அதுவே நல்லதென்று இந்த அவையில் ஏற்றுப் போற்றப்பெறும்” என்பது பாடலின் பொருள்.

'விரகர் புகழ்ந்திட' எனவே, அது உண்மையான புகழ்ச்சியாகாது என்றார். சோழனின் அவை புலமைக்கு மதிப்புத் தரவில்லை; புலவரின் புறத்தோற்றத் தகுதியை நோக்கியே மதிக்கிறது என்றும் உரைத்தார். அதனைக் கேட்ட மன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த நிலையே இன்றைக்கும் நிலவுகின்றது. வெளிமயக்கும், விளம்பரப் பெருக்கும், பிறவுமே இன்றைக்கும் ஒருவருக்குச் சிறப்பைத் தருகின்றன.

5. எல்லார்க்கும் எளிது!

வையார் பாடிய பாடலும் பேசிய பேச்சும் சோழனைப் பெரிதும் வருத்தின. கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண்டிருந்தவன் அவன். தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு கலங்கினான். பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடும் ஒளவையார், அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

"கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும். மற்றுத் தாங்கள் கருதுவதுபோல அவருடைய ஆடம்பரங்களை நினைத்து அன்று. அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்?" என்றான் அவன்.

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஔவையார் பாரகாவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது. அதனைக் கேட்டார் ஒளவையார்.

"சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய்.அதனைப்போல எவராலாவது ஒரு கூடு கட்ட