பக்கம்:கங்கா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

41


அன்றிலிருந்து நீங்கள் இளைத்துக்கொண்டே வருகிறீர்கள், நாளுக்கு ஒரு இம்மி, ஆனால் நிச்சயமாய். மெளனம் தன் சிறகுகளை விரித்து, உங்கள்மேல் இறங்கியிருக்கிறது. உங்களிடம் ஒரு விரக்தியைக்காண்கிறேன். உங்களை உங்களிடமிருந்து கழற்றி எதற்கோ சமர்ப்பித்துவிட்டு, பிறகு அதன் இஷ்டத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண் டிருக்கிறீர்கள். - எதனிடம் அதன் இஷ்டத்திற்கு உங்களை ஒப்ப டைத்துக் கொண்டு விட்டீர்களோ, அது உங்களைக் கற்கண்டுக் கட்டியாய்ச் சப்புகிறது. நீங்கள் கரைகிறீர் கள். இப்படியே ஒரு நாள் காணாமல் போய்விடுவீர்கள் என்று எனக்கு திண்னமாய்த் தெரிந்துவிட்டது. எனக்கு இப்படி எல்லாம் தோன்றுவதேனோ அறியேன். சாதாரணமாய், நான் என்னைச் சுற்றி கண்கூடாய்க் காணும் பொருள்களைப் பற்றிய எண்ணங்களின் தடத்தை மீறி சிந்திக்கச் சக்தியிலேன். எனக்குத் தோன்றுவ தெல்லாம் சரியோ தப்போ, நிச்சயமாய், உங்களுக்குள் ஏதோ நேர்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ விலக்க முடியாதது, விபரீதமானது. மெலிய, மெலிய, பனி விலகினாற்போல், சட்டை யுரித்தாற்போல், மெருகு ஏற்றினாற்போல் உங்கள் உடலில் ஒரு துலக்கம் காண்கிறது. காந்த விளக்கின் திரிபோல் முகத்தில் நீல ஒளி குளுமையாய் வீசுகிறது. எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. திகிலாயிருக்கிறது. உங்களை விட்டு அகலவும் மனம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/55&oldid=1283282" இலிருந்து மீள்விக்கப்பட்டது