பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

5


செயற்கையாகிய கைவண்ணத்திறம் காட்டும் கவின் கலைகளையும், காவியக் கலைகளையும் ஆழ்ந்து அனுபவிக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்தம் உள்ளமேயாகும்.

உள்ளம் நல்லதாக அமைதல் மட்டும் போதாது. அதற்கு மேலாக, அந்த நல்லுள்ளமும் ஒருமை வயப்பட்டதாக அமைய வேண்டும். ஒருமை உணர்வே கடவுள் நெறியை நல்க வல்லதென்பர் மேலோர். கலை நெறியும் அத்தகைய கடவுள் நெறியை ஒத்ததேயாகும். தெய்வ வடிவாம் கலைமகளைக் காட்ட வந்த பாரதியார் அவள் இருப்பிடங்களைக் கலை வாழ் இடங்களாகவே காட்டுதலை நாம் அறிவோம். அவள் இருப்பிடத்தைக் குறிக்க விழைந்த பாரதியார்,

“மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்;
        மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்:
கீதம் பாடும் குயிலின் குரலைக்
        கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்;
கோத கன்ற தொழில் உடைத் தாகிக்
        குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
        இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.’

என்கின்றார். எனவே, கடவுளைக் கலையாகக் காணும் அளவுக்கு இக்கலை ஏற்றமுற்று வாழ்கின்றது. இசைக் கலையை அனுபவிக்கத் தெரியாதவன் மனிதனே அல்லன், என்று ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியர், ஒரு கலையின்வழி அனைத்துக் கலையையும் மனிதன் அனுபவிக்கவே பிறந்தான் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். எனவே, கடவுள் நெறிக்கு இன்றியமையாத ஒருமை உணர்வு கலை நெறிக்கும் தேவைப்படுகின்றது. இவ் உண்மையைச் சுந்தரர் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.