பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


மக்களைத் தட்டி எழுப்பப் பாடினார். அவர் பாடல்களில் நாட்டுப் பாடல்கள் பல, அக்காலத்திற்கு ஏற்றவை. அடிமைத் தளை அகன்று உரிமை பெற்ற இந்திய நாட்டைக் காண விழைந்தார் பாரதியார். அந்த அரசியல் உரிமை ஒன்றிற்கு மட்டும் அவர் போராடியிருப்பாராயின் அவரும் ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு 1947 ஆகஸ்டு 15ல் மறைந்து போயிருப்பார். அவர் பாடல்கள் உரிமை நாட்டுப் பாடல் என்ற ஒரு வகையொடு எல்லையிட்டு நின்றுவிடவில்லை. இன்றும் நாட்டில் நடமாடும் பல கொடுமைகளைக் காட்டி, நடமாடும் தெய்வங்களாகிய மக்கள் மனமகிழ்ந்து வாழவேண்டிய வழி துறைகளைத் துருவித் துருவி ஆராய்ந்து பாடினார்; காணாக் கடவுளரைக் கண் முன் காட்டும் வகையிலே பாடினார். ஓவியர் கிழியில் தீட்டிக் காட்டுப் அளவில் நின்ற கலை மகளை மாதர் தீங்குரலிலே, மக்கள் மழலையிலே, கோயிலிலே, கோபுரத்திலே, இன்னும் அழகாரும் இடங்களிலேயெல்லாம் கண்டு காட்டினார். பரந்த உயிரினத்தில் ஒன்றையும் பிரிக்க முடியாதபடி, ‘காக்கைக் குருவி எங்கள் சாதி’ என்று பிணைத்துக் காட்டினார். இன்னும் அவர் காட்டியன எத்தனையோ! அவற்றைப்பற்றியெல்லாம் இன்று பேசிக் கொண்டிருப்பின், ‘மற்றொன்று விரித்தல்’ என்னும் குற்றத்திற்கு உள்ளாவேன். ஆகவே, மக்களை வாழ்விக்கக் கவி புனைந்தார் என்று சொல்லிவிடுகின்றேன். அதனாலேயே அவர் என்றென்றும் வாழும் அமரர் ஆயினார் என்றல் பொருந்தும். இன்று அவர் அடி ஒற்றி, இந்த உலக வாழ்வினையும், வாழவேண்டிய வகையினையும், பிற நல்லியல்புகளையும் பல புலவர்கள் பாடிக் கொண்டுதான் வருகின்றார்கள். அவர்களுள் ஒரு சிலரைக் கண்டு அவர்தம் பாடல் பற்றி அறிவோம்.

இன்று உரிமை பெற்ற இந்திய நாட்டில் இந்நாட்டு மொழிகள் அனைத்தையுமே வளமானவையாக்க வேண்டுமென அரசாங்கத்தார் முயற்சிசெய்து வருகின்றார்கள். அந்நிலையில் தமிழும் ஒன்றாகி வளர்ச்சியுற்று வருகின்றது