பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

13


வாறு கலையுள்ளம் தன் வாழ்வையும் ஒறுத்து நிற்பதைக் காண்கின்றோம். இது போன்ற காட்சிகள் இலக்கியங்களில் மிகப்பல. இது நிற்க,

கலை, மக்கள் வாழ்வை மலர்விக்கின்றது என்னலாம். கலைமலிந்த உள்ளத்தார் நெடுங்காலம் நிலைத்து வாழ்வர். அவர் இறந்தாலும் அவர் புகழைக் காட்டிக் கலை அவரை வாழச்செய்யும் சாவா மருந்தாக இருக்கிறது என்பது உண்மை. எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவரை இன்றும் நம் முன்னே வாழவைப்பது அவர் கலைத்திறன் அன்றோ? உள்ளத்தால் உணர்ந்து உதட்டால் பாட்டிசைத்து எழுதிவைத்த அந்தப் பெருங்கலைக் கோயில்களின் பெருந் தெய்வங்களாக அன்றோ அப்புலவர்கள் வாழ்கின்றார்கள்? புலவர்கள் மட்டுமல்லாது, மாமல்லபுரச் சிற்பங்களைச் செதுக்கிய சிற்பியரும், சித்தன்னவாசல் சித்திரங்களைத் தீட்டிய சித்திரக்காரனும், தாஜ்மகாலை உருவாக்கிய சிற்பியும், எகிப்தின் கோபுரங்களை நிறுவிய கலைஞரும் இன்றளவும் அவற்றின் உள்ளும் புறமும் உயர வாழ்ந்து கொண்டேதானே இருக்கின்றார்கள்? அவர்கள் மட்டுமா வாழ்கின்றார்கள்? அவர்கள் காலத்து வாழ்ந்த அரசர்கள் வாழ்கின்றார்கள்; அக்காலத்து நாகரிகம், பண்பாடு, பிற அனைத்தும் அவற்றை இருப்பிட மாகக் கொண்டே வாழ்கின்றன அல்லவா?

இன்றை நில ஆராய்ச்சியாளரும், வரலாற்று அறிஞர்களும் இத்தகைய கலைகளையும் புதைபொருள்களையும் கண்டு எத்தனையோ உண்மைகளை உணர்ந்துள்ளார்களே! சிந்து வெளியில் சிதைந்த பண்டைத் திராவிட நாகரிகத்தைத் தோண்டிக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதில் காணும் கட்டடக் கலையையும் பிற கலையையும் கண்டு