பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கண்டு வியக்கின்றார்களே! கட்டடம் அந்த நினைவுக் கெட்டா நெடுங்காலத்தில் எத்தனைக் கலை உணர்வோடு, கருத்து நலங்களோடு ஆக்கப்பட்டன என்பதை நினைக்குந்தோறும் அந்த மரபில் தோன்றிய மக்களுக்குப் பெருமிதம் அல்லவா பிறக்கும்! அத்துணைத் தூரம் போவானேன்? தமிழ் நாட்டு மூலை முடுக்குகளிளெல்லாம் காணப்பெறும் வானோங்கி வளர்ந்து நிற்கும் கோபுரக் கலையினை எண்ணும்போது உள்ளம் களிதுளும்பாது நிற்குமோ? பற்பல வகையில் பற்பல ஆண்டுகள் பொறியியற் கல்லூரியில் பயின்று பட்டமும் பதவியும் பெற்ற பொறியாளர் பலர் சிந்தித்துச் சிந்தித்துச் செய்யும் பல செயல்களிலும், இக்கோபுரம் அமைக்கும் செயல் மேலானதாக அன்றோ விளங்குகின்றது? அன்று பொறியியல் கல்லூரி இருந்ததாக அறியவில்லை. அவர்களைக் காட்டிலும் நாம் படித்தவர்கள் என்று பேசிக்கொள்ளுகிறோம். நாம் நாகரிகத்தில் வாழ்கின்றோம் எனக் கருதுகின்றோம். ஆனால், அவர்கள் செய்த அத்துணைப் பேராற்றல் மிக்க பெருவேலைகளைக் கண்டு திகைக்கின்றோம். கோபுரங் கட்டி, அவற்றில் கலையையும் வாழவைத்த நம் முன்னோர் திறனைப் போற்றாதிருக்க முடியுங்கொல்?

இனி நாடகம் முதலிய கலைகளையும் வாழ்வொடு பிணைத்துக் காணல் வேண்டும். தமிழே மூவகையாகப் பிரிக்கப்பட்டதென்பதை யாவரும் அறிவர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக் கலையேயாகும். இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுதிகளையும் கலையாகவே வளர்த்தனர் தமிழர், இயற்றமிழின் இலக்கியக்கலை நலத்தையெல்லாம் பல்வேறு காப்பியங்கள் நமக்குத் தந்துள்ளன. அவற்றின் சிறப்புக்களைத் தமிழ் உலகமும் தமிழ் மாணவர் உலகமும் நன்கு அறியும். வங்க நாட்டில் வாழும் மக்களும் நீங்களும் கற்றும் கேட்டும் கலை நலத்தோடு வாழ்கின்