பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


அறிய முடியாத ஒன்று. தமிழ்நாட்டு மண்ணை ஆராயும் நில ஆராய்ச்சியாளரும் இந்நிலம் காலத்தால் முந்தியது என்பதைக் குறித்துள்ளார்கள். இதில் வாழ்ந்த குடிகளைப் பற்றி உரைக்கும்போதும் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ என்று பேசுகின்றனர். எனவே, தமிழ் நாடும் அதில் வாழும் மக்கள் இனமும், அவர் வழங்கும் மொழியும், அதில் தோன்றிய இலக்கியங்களும் என்று தோன்றின என்று வரலாற்றின் கண்கொண்டு அறுதியிட முடியாது. அது பழம்பெரு மொழி என்று அமைவதைத் தவிர வேறு நினைத்தற்கு வழி இல்லை.

இத்தகைய மிகப்பழமையான மொழியில் பழமையான இலக்கியங்கள் தோன்றுவது இயல்பேயாகும். ஆனால், அவ்வாறு தோன்றிய நாளினைத்தான் நம்மால் அறுதியிட முடியவில்லை. தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என்பர். அதற்கு முன்னே பலப்பல இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன என்று அது கூறுகின்றது. எப்பறியும் தமிழ் இலக்கியத் தோற்றக்காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஒருதலை. இதன் விளக்கம் பற்றியெல்லாம் ‘தமிழ் இலக்கிய வளர்ச்சி’ என்னும் தலைப்பில் கண்டோம்.

இங்கு அந்த இலக்கியம் வளர்ந்து, காப்பிய உலகம் தோன்றியதையும் அக்காப்பிய உலகு இன்று தமிழில் நிலைத்து வாழும் இடம் பெற்றதையும் காணல் வேண்டும். சங்க இலக்கியங்களைப் பற்றியும் அவற்றிற்கு முன் எழுந்த இலக்கியங்களைப் பற்றியும் நம் நாடு நன்கு அறியும். அக்காலத்திய இலக்கியங்களுக்கும் பிற்காலத்திய இலக்கியங்களுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. சங்க இலக்கியத்தின் சிறு சிறு பாடல்கள் மக்கள் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆயினும், அதற்குப்