பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

61


எங்கோ ஒரு சேக்கிழார், ஒரு கம்பர், ஓர் இளங்கோ, ஒரு தேவர் என்று இப்படி எண்ணக்கூடிய அளவில் காவியப்புலவர் சிலர் வாழ்ந்து சென்றுள்ளனர் என்பதை வரலாறு காட்டுகின்றதே!

இவ்வாறு காவியம் பற்றிய ஆய்வு செய்கின்ற காரணத்தால் நான் காவியங்களை வெறுக்கின்றவன் என்ற முடிவுக்கு வரவேண்டா. எனக்கு அத்தகைய எண்ணமும் இல்லையென்பதை என் மற்றைய பேச்சுகளிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆகவே, நான் இவ்வாறெல்லாம் பேசுவது அவற்றை இகழ்வதற்காக அன்று; அவை தோன்றிய வகையையும் வரலாற்றையும் அறிவதற்காகவே.

பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் ஆத்திசூடி படிக்கின்றான் ஆறு வயதுச் சிறுவன். அதன் பொருளை அவன் நன்கு உணர்ந்துகொள்ளவில்லை என்பதைக் காண்கின்றார் ஆசிரியர். அதற்காக என்ன செய்யவேண்டும் என்று எண்ணி எண்ணிப் பார்க்கின்றார். அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகின்றது. அதுதான் ஒரு கதையைச் சொல்லி, அதன் மூலம் அந்த ஆத்திசூடியின் ஓர் அடியை அவன் உள்ளத்தில் பதிய வைத்தல் என்பது. காவியங்களும் அந்த அளவிலேதான் செல்லுகின்றன. தமிழில் உண்டான முதல் காவியமே அந்த அடிப்படையில் பிறந்ததுதான் என்று அதன் ஆசிரியராகிய இளங்கோவடிகளே சொல்லிச் செல்லுகின்றார். எனவே, அறத்தாறு வாழ்ந்த மக்கள்—அறமே வாழ்வெனக் கொண்ட மக்கள்— அந்நிலை கெட்டு, மறந்து, மாறி நின்ற காலத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தவே இக்காப்பியங்கள் தோன்றின என்பது பெரிதும் பொருந்தும்.

தமிழில் முதல் முதல் தோன்றிய பெருங்காப்பியம் சிலப்பதிகாரமேயாகும். அதுவே பின்னால் தோன்றிய ஒரு பெருங்காப்பிய உலகத்தை உண்டாக்கித் தந்தது