பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


புலவர் அத்தனை பேரும் கலை நலம் தோய்ந்தவர்கள் என்று கூற முடியாது. கலை நலம் தோய்ந்த காவியத்தைப் பயில்பவர் யாவரும் கலையுள்ளம் வாய்ந்தவர் என்றும் கூற முடியாது. கலையைக் காணக் கண் மட்டும் போதாது; கருத்தும் வேண்டும்.

கலை வேறு, வாழ்க்கை வேறு என்று எண்ணுகின்றவர் இன்றும் நாட்டில் உள்ளனர். சாதாரண மக்கள் மட்டுமின்றி உயர்ந்த அரசியல்வாதிகளும் அறிஞர்களுங் கூடக் ‘கலை, வாழ்வோடு தொடர்பற்ற ஒன்று’ என்று பேசும் அளவுக்குச் செல்லுகின்றனர். ‘வாடுகின்ற ஏழை மக்கள் வயிற்றுக்கு உணவிருந்தால் போதும்; அவர்களுக்குக் கலை தேவை இல்லை,’ என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், அவர்களே அந்தப் பாட்டாளி மக்களுக்குப் பொழுது போக்குக்காகப் படக்காட்சிகளும் நாடகம் முதலியனவும் தேவை என்கின்றனர். அவ்வாறு சொல்வதன் கருத்தென்ன? படக்காட்சியும் நாடகமும் கலைகள் அல்ல என்பது அவர் கருத்தாகுமா? அப்படியிருக்க வழியில்லையே! அவையும் கலைதாமே! இதனால், கலை மனிதன் வாழ்வில், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இடம் பெற்றுத்தான் இருக்கின்றது என்பது புலனாகும்.

‘கலை கலைக்காகவே’ என்ற ஒரு கொள்கை நம் நாட்டில் மட்டுமின்றி, மேலை நாட்டிலும் பரவியுள்ளது. மேலை நாட்டவர் கருத்துப்படி கலைக்காகவே வாழ்பவர் அதற்காகவே மடியவேண்டும் என்பதாகலாம்; அதனால் மக்கள் வாழ்வுக்குப் பயன் இல்லை என்பதுதான் அவர் கொண்ட கருத்துப் போலும்! ஆனால், உலக வரலாறு இது முற்றிலும் தவறு என்பதைக் காட்டும். எங்கோ ஒருவர் இருவர் கலை வெறி கொண்டு கலைக்காகவே வாழ்வைத் தியாகம் செய்