பக்கம்:கடற்கரையினிலே.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது10

கடற்கரையிலே'பொல்லாக் கடலே ! தென்னவனுக்குரிய எத்தனை ஊர்களைத் தின்றுவிட்டாய் ! எத்தனை ஆறுகளைக் குடித்துவிட்டாய் ! எத்தனை மலைகளை விழுங்கி விட்டாய்! பழங்காலத்தில் பஃறுளி (பல்துளி) என்ற ஆறு பாண்டியனுக்கு உரியதாயிருந்ததென்று தமிழ்க் கவிதை கூறுகின்றதே! அந்த ஆற்றின் அழகைச் சங்கப் புலவராகிய நெட்டிமையார் பாடினாரே! அந்த ஆறெங்கே? அதன் பரந்த மணல் எங்கே? அவ் ஆற்றைக் கொள்ளை கொண்ட உன் கொடுமையை அறிந்து, கண்ணிர் வடித்தானே எங்கள் பாண்டியன்! அன்று அவன் அழுத குரல், இன்றும் உன் காற்றின் வழி வந்து என் காதில் விழுகின்றதே ! இம்மட்டோ உன் கொடுமை? எங்கள் பழந்தமிழ் நாட்டின் தென்னெல்லையாகத் திகழ்ந்த குமரியாற்றையும் குடித்து விட்டாயே ! 'தமிழகத்தின் வடக்கு எல்லை திருவேங்கடம், தெற்கு எல்லை குமரியாறு' என்று பனம்பாரனார் பாடினாரே அக்குமரியாறு எங்கே? 'தமிழ் கூறும் நல்லுலகத்தின்' எல்லையாக நின்ற அந்த ஆற்றையும் கொள்ளைகொண்டு எங்கள் வரம்பழித்துவிட்டாயே ! பஃறுளி யாற்றுக்கும் குமரி யாற்றுக்கும் இடையே அமைந்த நாடு நகரங்கள் எல்லாம், இருந்த இடந் தெரியாமல் உன் கொடுமையால் கரைந்து ஒழிந்தனவே! அந்நிலப்பரப்பில், அடுக்கடுக்காக உயர்ந்து ஓங்கி நின்ற குமரி என்னும் பெருமலையும் உன் பாழும் வயிற்றில் பட்டு ஒழிந்ததே ! ஐயோ ! நீ எங்கள் மண்ணைக் கடித்தாய்: ஆற்றைக் குடித்தாய்; மலையை முடித்தாய். இப்படி எல்லாவற்றையும் வாரி எடுத்து வயிற்றில் அடக்கும் உன்னை 'வாரி' என்று அழைப்பது சாலவும் பொருந்தும் ! நீ வாரி வாரி உண்டாய் ! நீங்காத வசையே கொண்டாய். உன் கொடுமையால் தமிழ்நாடு குறுகிற்று; என் உள்ளம் உருகிற்று.