பக்கம்:கடற்கரையினிலே.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.பரணர்


 சேர நாட்டின் பழைய துறைமுக நகரம் முசிறிப்பட்டினம். பேரியாறு கடலிற் பாயும் இடத்தில் பெருமையுற்று விளங்கிய அந்நகரம் சேரநாட்டின் திருமுகம்போல் இலங்கிற்று. செங்குட்டுவன் என்ற சேரமன்னன் அரசு வீற்றிருந்தபோது, சீரும் சிறப்பும் வாய்ந்திருந்த முசிறிக் கடற்கரையிலே வந்து நின்றார் பரணர் என்ற நல்லிசைக் கவிஞர். அப்புலவர் பெருமானை மெல்லிய பூங்காற்றால் வரவேற்று, திரைக் கரத்தால் தொழுது நின்றது முசிறிக் கடல். அது கண்டு இன்புற்ற பரணர் ஆர்வத்தோடு பேசலுற்றார் :

"சேர நாட்டுச் செல்வமே ! உன் சீர்மை கண்டு சிந்தை குளிர்ந்தேன். மலை வளமும் அலை வளமும் பெற்ற இந்நாடு உன்னாலன்றோ தலை சிறந்து விளங்குகின்றது? நறுமலரை நாடிவரும் வண்டினம் போல், உன் துறைமுகத்தை நோக்கி வரும் பல நாட்டுக் கப்பல்களைக் கண் குளிரக் காண்கின்றேன்.

"குடகடலின் கோமானே ! உன் பெருமையெல்லாம் சேரமன்னன் பெருமையன்றோ? எங்கும் புகழ் பெற்ற செங்குட்டுவன் உன்னைக் கண்னெனக் கருதிக் காக்கின்றான். அவன், செம்மை சான்ற வீரன்; வெம்மை வாய்ந்த வேந்தன். அடி பணிந்த அரசரை ஆதரிப்பான்;