பக்கம்:கடற்கரையினிலே.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாத்தனார்

23


ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் உன் அங்காடியெங்கும் நிறைந்திருக்கின்றன. பசியும் பிணியும் பகையும் இன்றி, பண்பும் பயனும் உடையராய்க் குடிகள் வாழ்கின்றார்கள். இதுவன்றோ வாழ்வு?

"தலைசிறந்த திருநகரே ! நீ அருளுடையாய்; பொருளுடையாய்; அழகுடையாய்; புலவர் பாடும் புகழுடையாய். நின் சீரும் சிறப்பும் பாடித் திருமாவளவன் கையாற் பரிசு பெற்றான் கடியலூர்க் கண்ணன். பட்டினப்பாலை என்னும் பெயரால் அவன் பாடிய பாட்டிலே செந்தமிழ்ச்சுவை சொட்டுகின்றது. தமிழ்த்தாய் உன்னை வாழ்த்துகின்றாள். அவளருளால் வாழும் அடியேனும் உன்னைப் போற்றுகின்றேன். கண்ணகியை ஈன்ற காவிரிப் பூம்பட்டினமே! வாழி; ஆற்றுமுகத்தில் வீற்றிருக்கும் அணி நகரே ! வாழி; நாட்டையும் நகரையும் ஊட்டி வளர்க்கும் காவிரித் தாயே ! வாழி.

" பாடல்சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி"

வாழ்க வாழ்க" என்று வாழ்த்திய வாயினராய்க் காவிரியைத் தொழுத கையினராய்க் கடற்கரையை விட்டகன்றார் சாத்தனார்.


1. மணிமேகலை : பதிகம்.