பக்கம்:கடற்கரையினிலே.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. புனிதவதி


மிழ்நாட்டிலே காரைக்காலின் பெருமை யாரைக் கேட்டாலும் தெரியும். வாணிகத்தால் வளம் பெற்ற காரைக்கால், புனிதவதி பிறந்தமையால் புனிதமுற்றது. காரைக்கால் அம்மையார் என்னும் செம்மைசேர் நாமம் பெற்றவர் அவரே ! அவ்வம்மையார் கருவிலே திருவுடையார்; கனிந்த திருவருளுடையார்; நாவிலே தமிழுடையார்; நற்றவத்தின் திறமுடையார்.

அவர் சில காலம் இல்லறம் நடத்தினார். ஒரு நாள், அவரிடம் அமைந்திருந்த தெய்வத் தன்மையைக் கண்டான் அவர் கணவன்; துணுக்கம் கொண்டான். வணங்கத்தக்க தெய்வத்தை வாழ்க்கைத் துணையாகக்கொண்டு மனையறம் புரிய அவன் மனம் இசையவில்லை. கடல் கடந்து வாணிகம் செய்து வருவதாகச் சொல்லிக் காரைத் துறைமுகத்தில் அவன் கப்பலேறினான். மாதங்கள் பல சென்றன. ஆண்டுகளும் சில கழிந்தன. கணவன் திரும்பி வரக் காணாது கையற வெய்திய காரைக்கால் அம்மையார் ஒருநாள் கடற்கரையிலே நின்று உள்ளம் உருகிப் பேசலுற்றார் :

"காரைப் பெருங்கடலே! நான் கண் பெற்ற கால முதல் நீ காட்சி தருகின்றாய். குழந்தைப் பருவத்தில் உன் தெள்ளிய மணலிலே தவழ்ந்து விளையாடினேன்; உன்