பக்கம்:கடற்கரையினிலே.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கடற்கரையிலே


அரக்கரெல்லாம் அழிந்தனர். அறப்பகையால் இராவணனும் ஆவி துறந்தான். அல்லற்பட்டு ஆற்றாது சீதை அழுத கண்ணிர் அரக்கர் கோமானை அழித்தது.

"கோடிப் பெருந்துறையே ! நன்றி செய்த உன்னை மீண்டும் நாடி வந்தான் இராமன்; என்றும் நீ செய்த நன்மையை உலகம் உணருமாறும், இராவணனைக் கொன்ற பழி தீருமாறும் உன் கரையருகே ஈசனுக்கு ஒர் ஆலயம் எடுத்தான்; பூசனை புரிந்தான். இராமன் எடுத்த அவ்வாலயம் இராமேச்சுரம் என்று பெயர் பெற்றது.

"தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முக பொன்றுவித்த பழி போயற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தனையினார்கள் தம்மேல்வினை வீடுமே."*

என்று எம்பிரான் சம்பந்தன் பாடிய பாட்டைப் படித்தேன்; என் தீவினையெல்லாம் தீருமாறு உன்னை அடுத்தேன். அரக்கர் தலைவனைக் கெடுத்த அகந்தை என்னும் நோய் அடியேனை அணுகாமல் காத்தருளல் வேண்டும். காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றமும் அகற்றிக் கயிலாய நாதனிடம் என்னைக் கடிதனுப்பவேண்டும். இராமனுக்கு அருள்புரிந்த இராமலிங்கப் பெருமானை நாடுகின்றது என் நெஞ்சம் ! சென்று வருகின்றேன்" என்று கோடிக் கரையிடம் விடைபெற்றுக் கோயிலை நோக்கி நடந்தார் நாவரசர்.


★ தேவாரத் திருப்பாசுரம்