பக்கம்:கடற்கரையினிலே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கடற்கரையிலே


வந்த எனக்கு ஏற்றமும் தோற்றமும் அளித்தவர் அவரே ! சிறப்புடன் சிவிகையில் ஏறி, மேளதாளத்துடன் அவர் மாளிகைக்குச் செல்லும் உரிமையை எனக்குத் தந்தார் அவர்; அங்காடி விலைகளையும் அரசியல் முறைகளையும் அந்தரங்கமாக என்னுடன் ஆலோசித்தார்; நிறவேற்றுமை சிறிதும் இன்றி நெருங்கி என்னுடன் மனங்கலந்து பேசி மகிழ்ந்தார்; மாறுபட்ட கருத்தை நான் எடுத்துரைத்தாலும் சீறி விழ மாட்டார்; தம் செவியில் ஏற்று நிதானமாக ஆராய்வார். இதுவன்றோ நல்லமைச்சனுக்கும் அதிகாரிக்கும் ஏற்ற பண்பு?

"கரை காணாக் கருங்கடலே ! ஆயினும், அவரிடம் ஒரு பெருங்குறை யுண்டு. அக்குறையினால் குன்று முட்டிய குருவிபோல் மறுகினார், அப்பெருமகனார். அவருக்கு மனையாளாய் வாய்த்த மேடம், செருக்கும் சிறுமையும் உடையவள்; எல்லோரையும் அடக்கி ஆள்வதில் ஆசையுடையவள். வீட்டிலே அவள் இட்டதே சட்டம் பொறியில் அகப்பட்ட எலி போல் அடங்கி அவள் சொல்லின் வழியே சுழல்வார் டூப்ளே துரை; ஒன்றும் மறுத்துப் பேச மாட்டாமல் விழிப்பார். அவள் அதிகாரம் வீட்டளவில் நின்றுவிடவில்லை. அரசியல் வேலைகளிலும் அவள் தலையிட்டு அல்லல் விளைப்பாள். அம்மேடம் தருக்குற்றுத் தகாத செயல்களைச் செய்யத் தூண்டும் பொழுது டூப்ளே தடுத்துச் சொல்ல அஞ்சுவார்; சில வேளைகளில் அடிமைபோல் கெஞ்சுவார்; அவர் கெஞ்சக் கெஞ்ச அவள் மிஞ்சுவாள். அந்தோ ! பேய் கொண்டாலும் கொள்ளலாம். இத்தகைய பெண் கொள்ளலாகா தம்மா !

"காலங் கண்ட நெடுங்கடலே! அன்றாடம் கவர்னர் வீட்டிலும் வெளிநாட்டிலும் நான் கண்டதும் கேட்டதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/74&oldid=1248523" இலிருந்து மீள்விக்கப்பட்டது