16. உமறுப் புலவர்
குணகடல் என்னும் கீழ்கடலை நோக்கி நிற்கும் துறைமுகங்களில் ஒன்று கீழக்கரை யென்றே பெயர் பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள ஈழக்கரைக்கு எதிரே அமைந்தது பாண்டி நாட்டுக் கீழக்கரை. மரக்காயர் என்ற மகமதிய வகுப்பார் கீழக்கரையில் வர்த்தகம் செய்து வளமுற்று வாழ்கின்றார்கள். அவ்வூரைச் சேர்ந்தவர் உமறுப்புலவர். இளமையிலேயே *இளசையில் வாழ்ந்த கடிகை முத்துப் புலவரிடம் கலை பயின்று, கவி பாடும் திறம் பெற்றார் அவர்; நபி நாயகத்தின் சரிதத்தைச் சீறாப் புராணம் என்னும் காவியமாகப் பாடிப் புகழ் பெற்றார்; முதுமை வாய்ந்த நிலையில் ஒரு நாள் கீழக்கரையில் நின்று குணகடலை நோக்கிப் பேசலுற்றார் :
"வளமார்ந்த துறைமுகமே ! செல்வமும் சீலமும் பொருந்தித் திகழ்கின்றாய் நீ ! தள்ளா விளையுளும் தாழ்விலாச் செல்வரும், தக்காரும் உள்ள இடமே தலை சிறந்தது என்று தமிழ்மறை கூறிற் றன்றோ? பாரி வள்ளல் வாழ்ந்ததனால் பாண்டி நாட்டுப் பறம்புமலை புகழ் பெற்றது. சடையப்ப வள்ளலின் கொடைத் திறத்தால் வெண்ணெய் நல்லூர் விளக்கமுற்றது. அவ்வண்ணமே சீதக்காதியால் சிறப்புற்றாய் நீயும் ! அவர் இந்நாட்டு வணிக மன்னர்; அளவிறந்த பொருளாளர். செல்வச்செருக்கு
- இளசை = எட்டயபுரம்