பக்கம்:கடற்கரையினிலே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பரனார்

93


கம்பெனியார் வாங்கிய சுதேசக் கப்பல் உன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக்கப்பல் இங்கிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்ட நாளில், இன்பவெள்ளம் என் உள்ளத்திலே பொங்கி எழுந்தது; கண்களில் ஆனந்தக் கண்ணிர் வழிந்தது.

"வாணிக மாமணியே ! அன்று முதல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது; வெள்ளையர் வாணிகம் தளர்ந்தது. அது கண்டு அவர் உள்ளம் எரிந்தது. வெறுக்கத்தக்க சூழ்ச்சிகளை அன்னார் கையாளத் தலைப்பட்டனர்; சுதேசக் கம்பெனி வேலையினின்றும் நான் விலகிக் கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக மறைமுகமாகக் கூறினர். எனக்கு உற்ற துணையாக நின்று ஊக்கம் தந்த நண்பர்களைப் பலவாறு பயமுறுத்தினர்; இவையெல்லாம் பயனற்று ஒழிந்த நிலையிலே அடக்கு முறையைக் கையாளக் கருதி, அரசாங்கத்தின் உதவியை நாடினர்.

"பரங்கியர் ஆளும் துறையே! ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடைய தென்றும், அதை அசைக்க எவராலும் ஆகாது என்றும் அப்போது பொது மக்கள் எண்ணியிருந்தார்கள். அதனால் அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்நாட்டு மக்களிடையே வளர்ந்தது. துரைத்தனத்தார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், 'சார், 'சார்' என்று சலாமிட்டும், 'புத்தி, புத்தி' என்று வாய் பொத்திச் 'சரி, சரி' எனச் சம்மதித்துத் தாளம் போடும் போலி அறிஞர், பட்டங்களும் பதவிகளும் பெற்று உயர்ந்தார்கள். அரசாங்கம் ஆட்டுவித்தால் அப்பதுமைகள் ஆடும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/95&oldid=1247683" இலிருந்து மீள்விக்கப்பட்டது