எண்ணம் பலித்தது
ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா கொலம்பஸ் முயற்சிக்கு ஆதரவளிப்பது பற்றியோ, அனுமதி கொடுப்பது பற்றியோ ஒரு முடிவுக்கு வர ஆறு ஆண்டு காலம் பிடித்தது. அந்த ஆறு ஆண்டுகளும் கொலம்பசுக்கு வாழ்க்கையே ஒரு நரகம் போல் தோன்றியது. கொலம்பஸ் தன் முயற்சி வெற்றி பெறுவது உறுதியென்று திடமான நம்பிக்கை கொண்டிருந்தான். அந்த வெற்றிதான் தன் வாழ்வில் ஒளி சேர்க்கும் என்று அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். ஆனால், சுற்றிலும் உள்ளவர்களில் பெரும்பாலோர் அவன் திட்டத்தைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். காற்று வாங்கப் போகும் போது மட்டும் கடலைப் பார்த்திருந்த அரச சபையைச் சேர்ந்த பலர் அவனை நையாண்டி செய்தார்கள். பெரும்பாலானவர்கள் அவனை ஒரு பிச்சைக்காரனிலும் கேவலமாக நடத்தினார்கள். உண்மையில் அவன் நிலைமையும் அவ்வாறுதான் இருந்தது. கைச்செலவிற்குப் பணமில்லாமல், அவன் அந்தச் சமயத்தில் வறுமைக்காளாகி வாதைப்பட்டுக் கொண்டிருந்தான்.
வார்ப்புரு:Bop