பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19

தாயார் எப்பொழுதும் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாள். அவள் செய்வது ஒருவேளை முற்றிலும் சரியாக இருக்கும் என்று ஜீடி நினைத்தபோதிலும், அப்படி மாறுபாடில்லாமலிருக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள். பள்ளியிலிருந்த சிறுமி ஒருத்தியின் தகப்பனோடு ஒரு தடவை சச்சரவு. அவள் நல்லவள் அல்லதான்; இருந்தாலும் அவள் தகப்பனேடு எதற்கு...... ? தாயாருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அவ்வளவு தூரத்திற்கு அவசியமா ?

பள்ளி விடுமுறை நாட்களில் அவர்கள் மலைவாசத்திற்குச் சென்றார்கள். ஆனால் ஜூடியின் தந்தையும் தாயும் அவ்வளவு நாட்களுக்கு அங்கு தங்க முடியாது. ஆகையால் ஒரு நண்பரோடு தங்கும்படி ஜூடியையும், பெஞ்சமினையும், ஆயாவையும் விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அந்த நண்பருக்கு ஒரு பையன் உண்டு. அவனுக்குத் தபால் தலைகள் சேகரிப்பதில்தான் விருப்பம், அதனால் அங்கு வாழ்க்கை உற்சாகமற்றதாக இருந்தது. இருந்தாலும் மலையில் குளிர்ச்சியாக இருந்தது. மாலைவேளைகளில் ஜெர்சி அணிந்து கொள்ளவும் இரவிலே கம்பளியைப் போர்த்துக் கொள்ளவும் அங்கே முடியும், குளிர்ந்திருப்பதால் ஓடியாடி விளையாட வேண்டுமென்றே ஆசை உண்டாயிற்று. சென்னையிலே அப்படி உண்டாகாது.

ஜூடியின் பதினொன்றாவது பிறந்த நாளன்று அவளுக்கு விருப்பமான சில புத்தகங்கள் கிடைத்ததென்றாலும் பொதுவாக அந்த நாள் உற்சாகமின்றியே இருந்தது. இருப்பினும் அன்று அவள் ஒரு நல்ல காரியம் செய்தாள். அவளும், தபால் தலைகள் சேகரிக்கும் பையனும் வனவிலங்குகளின் ஒதுக்கிடமான ஒரு காட்டிற்குச் சென்று பல மணி நேரம் ஒரு யானையின் மீதேறிச் சுற்றினர். மகாபலிபுரத்து யானையைப்போல அது நல்ல யானை,