பக்கம்:கடவுள் பாட்டு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தேடி யமரும் திருப்பேறே
தேவ தேவா உன்னடியே
நாடிக் கிடக்கும் அடியேனை
நலம்பு ரிந்து காப்பாயே!

87


உருளைக் கிழங்கு வறுவலிலே
உள்ள சுவையை நாவறியும்
அருளைத் தருமுன் திருவடியில்
அடையும் பேற்றை நானறிவேன்
இருளைப் போக்கி ஒளி சேர்க்கும்
இன்ப விளக்கே மதமென்னும்
மருளைச் சேரா வணமென்றன்
மனத்தைக் காப்பாய் பெருமானே.

88


இளமை முறுக்கும் உடல்வலிவும்
இருந்த போது பாடுபட்டு
வளமும் பொருளும் சேர்த்தேன் நான்
வளர்ந்து முதிர்ந்து நரம்பெல்லாம்
தளர்ந்து போன முதுமையிலே
தாய்போல் உதவிற் றதுபோலே
வளர்ந்த உன்றன் பேரன்பும்
வாய்த்த துணையாய் ஆயிற்றே.

89

ஐயா உன்றன் துணையிருந்தால்
அச்சம் போகும் வலுவுண்டாம்
மெய்யாய் உன்றன் அருளிருந்தால்
மிதிபட் டொழியும் துன்பமெலாம்
கையை நம்பி வாழ்வோர்க்குக்
கருணை புரியும் பெருமானே
பொய்யாம் சமய வழிவிலகிப்
பொற்றாள் பற்ற அருள்வாயே.

90