பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23
 


இல்லாதவாறு முற்றிலும் அகற்றாதது ஏன்? அறிவியலார் (விஞ்ஞானிகள்) வாயிலாகக் கடவுளே எல்லாம் கண்டுபிடிக்க வைக்கிறார்-அறிவியலார் வாயிலாகவே வறுமை, பிணி, இன்ன பிற துன்பங்களைக் கடவுள் அகற்றுகிறார் எனில், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு கட்கு முன்பே அறிவியலார் வாயிலாகக் கடவுள் இந்தக் கண்டு பிடிப்புகளையெல்லாம் செய்ய வைத்திருக்கலாமே! இவ்வளவு காலம் தாழ்த்திக் காத்திருந்ததேன்? இப்போதுதான் அக்கறை பிறந்ததா?

உயிர்களின் இன்னல்களைப் போக்கக் கடவுளே பூவுலகில் வந்து (அவதாரம்) பிறவி எடுக்கிறாராம்; உலகில் கொடுமைகள் மலிந்துவிட்டபோது அவற்றைப் போக்கக் கடவுளே மக்களிடை வந்து அவதரிக்கிறாராம்.

சரி, தம் பேராளர்களை (பிரதிநிதிகளை) உலகிற்கு அனுப்பியும் பயன் இல்லாது போகவே, கடவுள் தாமே நேரில் வந்து அவதரிக்கிறார் போலும்! சரி, எத்தனையோ மதத்தார்கள் சொல்கிறபடி எத்தனையோ அவதாரங்களைக் கடவுள் எடுத்தாரே-அதனால் பயன் என்ன? உலகில் எந்தத் தீமை-எந்தத் துன்பம் குறைந்துள்ளது? இந்த அவதாரங்கள் எல்லாம் முழுத் தோல்வி அடைந்தனவே தவிர, ஏதேனும் வெற்றி கண்டனவா? அவதாரங்கட்கு முன் இருந்த தீமைகளுள்-கொடுமை களுள்-துன்பங்களுள் இப்போது எது எவ்வளவு குறைந்துள்ளது?

‘பார்க்க வந்த சீமாட்டி பல் உடைந்து போனாளாம் எடுக்க வந்த சீமாட்டி இடுப்பு ஒடிந்து போனாளாம்’-என்னும் பழமொழிகளின் உட்பொருள் போல, மக்களின் துன்பங்களைப் போக்க மேலுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த அவதாரங்கள் எல்லாம், மக்களைப் போலவே உலகில் பெருந் துன்பம் உற்றுச் செத்துத்