பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



ஆயிரமாய் விண்மீன்கள் பூக்கும் ; வானில்
அந்திநிலா என்னைப்போல் ஒன்றே பூக்கும்.
தாய்வயிற்றைக் கீறிவரும் நண்டுக் கூட்டம்
தரையின்மேல் பலகோடி ; ஆனால் அஞ்சப்
பாய்ந்துவரும் சிங்கங்கள் நாட்டில் உள்ள
பகுத்தறிவு வாதிகள்போல் ஒன்றி ரண்டே !
ஒய்வின்றி நான் நடத்தும் நாக்குச் சண்டை
உங்களுக்குள் ஒருசிலரின் சார்பா கத்தான்.

பிறப்புக்குப் பகையான சாவில், என்னைப்
பிடர்பிடித்துத் தள்ளுகிறீர்; மாந்தர் வாழ்வில்
இறப்பென்றால் வேறென்ன ? கனவு கூட
இடையூறு செய்யாத இனிய தூக்கம் !
இறப்புக்கு நானஞ்ச வில்லை ; ஆனால்
என்சாவு தற்கொலைதான் உங்க ளுக்கு !
சிறப்பான நல்லறிஞன் என்னை விட்டால்
சீக்கிரத்தில் வேறொருவன் கிடைக்கமாட்டான்.

பறந்துவரும் வேலுக்கும் கண்சி மிட்டும்
பழக்கமறி யாதவன்; முன் வைத்த காலை
மறந்தும்நான் மாற்றிவைத்த தில்லை: போர்ப்புண் மலிந்திருக்கும் தழும்புமலை என்றன் தோள்கள்!
பிறந்தநொடி முதல்இன்று வரைக்கும் அச்சப்
பேயைநான் சந்தித்த தில்லை ; ஆனால்
அறங்கூறும் நாக்குக்கும் கொடும்ப ழிக்கும்
அஞ்சாமல் நானென்றும் இருந்த தில்லை.