பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



நூறுமுறை சாவதற்குத் தண்டித்தாலும்
நும்முள்ளம் எனையின்று மன்னித்தாலும்
வேறுதொழில் நான்செய்யப் போவதில்லை.
வேங்கையைப்போய் வரிக்கோட்டை மாற்றிக்கொள்ளக்
கூறுகின்றீர் நடைபெறுமா ? உயிரின் மேலாம்
கொள்கையினை நான் துறக்கமாட்டேன். பாயும்
ஆறுகளும் திசைமாறும்; ஆனால் இந்த
அறிஞனென்றும் திசைமாறப் போவதில்லை.

நதிவீதி சந்திக்குமுச் சந்தி ஏறி
நாவீரம் காட்டிப்பல் கூட்டம் கூட்டி
“விதியில்லை ; வெவ்வேறு கடவு ளில்லை ;
விண்ணியலும் மண்ணியலும் அறிதல் வேண்டும்;
அதிகார அரசியல்தான் அற்பர் வீடாம் :
ஆணவத்தின் மறுபதிப்பே கொடுங்கோல் ஆட்சி;
புதுப்பாதை, காட்டுகிறேன் : அறிவைத் தேடிப்
புறப்படுங்கள் !” என்றுசொல்லத் தயங்கமாட்டேன்.

தேர்ப்போட்டி நடத்துகிறீர் : துருத்தி மூக்கில்
திணறுகின்ற நுரைமூச்சு விட்ட வண்ணம்
ஆர்த்துவரும் குதிரைதரும் வெற்றிக் காக
அதையோட்டி வருபவனைப் போற்று கின்றீர்.
தார்க்குச்சி இல்லாமல் உம்மை யெல்லாம்
தன்மானப் பாதைக்குச் செலுத்தும் என்னைத்
தீர்த்துவிட நினைக்கின்றீர், பளிங்குக் கல்லால்
தெருத்தோறும் சிலையெடுத்துப் போற்றிடாமல் !