பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


உதடென்றால் பேசுதற்கே என்றும், இந்த
ஒல்லியிடை குடந்துாக்க என்றும், தங்கச்
சதையுடம்பு மரவுரிக்கே என்றும், ஒன்றும்
சரியாக நானறியா நாளில் வந்து
பதமான பருவவயல் உடம்பை நன்கு
பயன்படுத்தக் கற்பித்தீர் ! உங்கள் வாயில்
இதமான பேச்சையெதிர் பார்த்து வந்தேன் :
எரிநெருப்பை என்செவியில் பாய்ச்ச லாமா ?

நெளிகின்ற புழுப்போல இலைப்ப டுக்கை
நெருப்பில் நான் துடிக்கையிலே, அன்று நீங்கள்
கிளியுடம்புத் தாமரையின் இலையை ஒடிக்
கிள்ளிவந்து வீசிநின்றீர் ; நெருங்கி என்றன்
தளிரடியைப் பிடிப்பதற்கும் துடித்தீர் ! நானோ
தகாதென்று தடுத்துவிட்டேன் இன்று நீங்கள்
உளியாக மாறிவிட்டீர் ! என்றன் காதல்
உணர்ச்சிகளைச் செதுக்குதற்குத் துணிந்துவிட்டீர்.

‘குடந்தூக்கும் தளிர்க்கொடியே! எங்கே சொல்லிக்
கொள்ளாமல் ஒடுகின்றாய்? ஊற்றும் தண்ணீர்க்
கடன்தீர்க்க வேண்டுமென்று தோழியர்கள்
கையாலே தடுத்தார்கள் ; என்துன்பத்தை
உடன்தீர்க்க ஓடிவந்தீர் ; நாணத் தாலே
உடம்பெல்லாம் குங்குமப்பூ ஆனேன்; இன்றோ
படந்ததூக்கிக் கடிக்கின்ற நாகத் தைப்போல்
பற்களினைப் பாவையென்முன் நீட்டு கின்றீர்.

க. தி. 2