பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணீரில் கரைகின்றேன்

தெல்லோ கருத்த உடலும், கனத்த உதடும் கொண்ட மூரினத்தைச் சார்ந்தவன் ஆனால் அஞ்சாமை மிக்க மலைத்தோள் வீரன். அவன் மனைவி டெஸ்டிமோனா; வெனிசு நாட்டு வெள்ளைமயில் : கிள்ளை மொழிக் காரிகை. வஞ்சகரின் வாய்மொழியைக் கேட்டுப் பிஞ்சு நிலா போன்ற தன் மனைவியின் கற்பில் ஐயம் கொண்டு, அவளைக் கொல்லும் எல்லைக்கே சென்று விடுகிறான் ஒதெல்லோ. பளிங்குச் சிலைபோல் பஞ்சணையில் படுத்துறங்கும் அவளைப் பார்க்கிறான். அப்போது அவன் உள்ளம் பேசுகிறது , உதடும் பேசுகிறது.

மலைப்பனிபோல் நிறத்தவளே ! வெனிசில் வாழும்
மானினத்தில் பிறந்தவளே ! கிரேக்க நாட்டுக்
கலைக்கோயில் போன்றவளே ! வர்ஜில் சொன்ன
காவியமே ! ஒவியமே ! சிற்பி தந்த
சிலைப்பளிங்கைப் போலிருக்கும் டெஸ்டி மோனா
சிறுகீறல் உன்னுடம்பில் செய்வ தற்கும்
மலைக்கின்ற தென்னுள்ளம் ; உனது ரத்தம்
மண்மீது சிந்துவதைப் பொறுக்க மாட்டேன்.

நாட்டாட்சி செய்வதற்குப் பிறந்த நானோ
நகைமுத்தே ! காலமெல்லாம் இனிக்கும் காதற்
கூட்டாட்சி உன்னோடு நடத்து தற்குக்
கொண்டிருந்தேன் பேராசை ! அதனை இன்று
வேட்டுவைத்துத் தகர்த்துவிட்டாய்; உன்னுடம்பை
வேட்டைக்கா டாக்கிவிட்டாய், பஞ்சணைப் போர்ப்
பாட்டரசி ! பண்பாட்டை விற்று விட்டுப்
பரத்தைநிலைக் கிறங்கிவிட்டாய் ! பழிசெய்திட்டாய்