பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



பெண்ணும் ஆணும் முகத்து விளக்குக்
கண்ணைப் போன்றவர் ; வலக்கண் மற்றொரு
கண்ணைக் கேவல மாகக் கருதுமோ ?
ஆண்டவன் பெண்ணை அடக்க நினைக்கிறான்;
தந்தை என்ற பெயரை மறந்து
தலைவன் என்று தருக்கொடு நிற்கிறான் ;
எடுத்துக் காலை இல்லத்தில் வைத்ததும்
மடக்கொடி நங்கையும் மக்களும் தோன்றி
எதிர்கொள வேண்டும் ; மண்டியிட் டமர்ந்து
காலின் செருப்பைக் களைய வேண்டும் ;
ஆட்டும் அவன்கைச் சுட்டு விரற்குப்
பாட்டுப் பாடி நடிக்கவும் வேண்டும்.

வாணாள் அடிமையாய் வந்து பிறந்தும்
அடுக்களைப் பட்டடையில் அடங்கிக் கிடந்தும்
கறையிலா ‘மேனிக் கட்டுடல், பிள்ளைகள்
பெறுவதால் தேய்ந்து பிறைநிலா வாகியும்,
பண்ணிசை பேசியும், படுக்கைக் கணவன்
கண்ணசை விற்குக் காத்துக் கிடந்தும்
வாழும் பெண்கள் வரலாறு துன்டமே.

குணமெனும் குன்றில் இருந்து வாழ்வைப்
பனிமலர்ச் சோலையாய் மாற்றும் பெண்கள்
பணம் அடை காக்கும் பழக்கம் கொண்ட
கணவன் முன்கை யேந்திநிற் கின்றனர்.
கற்பைக் காதலைக் கடமையை நம்பித்
தன்னையே தந்த கணவன், பெட்டியின்
முன்னால் மனைவியை நம்ப மறுக்கிறான்.