பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


கற்பனைச் சுவையும் கவிதை இனிமையும்
பெற்றதென் றெண்ணிப் பேசத் தகுந்தது.

நினைவில் புகழை நிறுத்தும் நாங்கள்
கனவில் கனவு கண்டவர் ; என்றும்
வரும்பொருள் உணர்த்தும் வல்லமைபெற்ற
பெரும்பெரும் ஞானியைப் பெற்றுச் சிறந்தவர்.
அறமும் பொருளும் இன்பமும் உணர்ந்து
துறவும் கற்றவர் ; தோல்வியே காணா
மறவர் குலத்தை மண்ணுக் களித்தவர்.
கொழுந்துவிட்டெரிந்த கொடுமை நெருப்பில்
அழுந்திப் புடமிட்ட ஆடகப் பொன்போல்
எழுந்து வந்த இளங்கதிர் மக்கள்.

உலகம் என்னுமிவ் வோசைப் பந்தில்
வளரும் மானிடச் சாதிகள் வளர்த்த
கலைப்போர், சிந்தனைக் கருத்துக் களப்போர்
அலைப்பண் பாட்டின் ஆக்கப் போர்எனப்
பலப்பல வாகப் பல்கிய போர்களின்
வீரவட்டத்தில் ஆர்வ நெஞ்சுடன்
பாய்ந்து வந்த பருத்ததோள் மறவர்கள்.
செழித்தபண் பாடும் இலக்கியச் சிறப்பும்
பழித்தல் இல்லாப் பழம்பெரும் புகழும்
கொண்டவர் நாங்கள் ! எங்கள் இல்லமோ
கருங்கடற் சுவர்களும், கால்மிதிக் கா
பெரும்பனிக் கூரையும் பெற்றுச் சிறந்தது ;
தருவிருந் தோம்பி வருவிருந் துக்குத்
திறந்து கிடக்கும் திருவாயில் கொண்டது.