பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


நாட்டுக்குப் பொதுவுடைமை நீங்கள்’ என்றும்
நடுங்காத நெஞ்சுரத்தைப் பெற்றுத் தீயோர்
ஆட்டத்துக் குத்தாளம் போடா தீர்கள் ;
அரசாங்கம் கொடுங்கோலாய் ஆகும்’ என்று
தீட்டுகிறார் நல்லறிஞர் ரஸ்ஸல் , இந்தத்
திருநாட்டு மாணவர்கள் சிந்த னைக்கும்
பூட்டிருக்கக் கூடாது ; மடமை அச்சம்
புகவிடுதல் கூடாது கல்விக் கூடம்.

மூவேந்தர் முடியாட்சி, குப்த ராட்சி
மொகலாயர் பேராட்சி ஒய்ந்த பின்னர்
காவலற்ற கனித்தோட்டம் ஆனோம் : மாற்றார்
கைப்பிடிக்குள் குரல்வளையைக் கொடுத்து விட்டோம்,
ஆவலுடன் மேனாட்டைப் பார்த்து நம்வாய்
அங்காந்தோம்; இந்நாட்டில் தொன்றுதொட்டு
நாமென்ன சாதித்தொம் ? என்ற எண்ணம்
நமக்கில்லை ; நாம்திருப்பிப் பார்க்க வில்லை.

அக்காலம் நம்நாட்டில் ஆங்கி லேயர்
அமைத்தகலைக் கழகங்கள், நம்மை ஆட்சிச்
சக்கரத்தில் சிக்கவைக்கக் கண்டோம் ; ஆமாம்
சாமியெனும் அடிமைகளாய் ஆக்கக் கண்டோம்.
இக்கழகம் அடிமைவிலங் கொடித்த பின்னர்
எழுகின்ற இளம்பரிதிக் கழகம் ; நாட்டு
மக்களினை ‘ஒளிபடைத்த கண்ணா’ என்று
மகிழ்வோடு வரவேற்கும் கழகமாகும்.