பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

குனியாத பணியிமயக்குன்றத் துக்கும்
குமரிக்கும் ஒட்டுறவு தேவை; வைரக்
கணயாழிப் பொருத்தத்துக் காக வேண்டிக்
கைவிரலைக் குறைப்போமா?தன்மா னத்தை
நினையாமல் வேற்றுமொழி ஆதிக் கத்தை
நிச்சயமாய் வரவேற்க மாட்டோம்; மேனி
நனைகின்ற பூங்காற்றின் குளிர்ச்சிக்காக
நம்உடையை அம்பலத்தில் இழக்க மாட்டோம்.


பாலாறு கங்கைநதி பொன்னி வைகை
பாய்கின்ற இந்நாட்டுப் பொருளா தாரம்
மேலேறு தல்நமது குறிக்கோள் ஆகும்.
மேன்மேலும் பெருஞ்செல்வம் இங்கி ருக்கும்
நாலாறு பேரிடத்தில் சென்று சேர்தல்
நன்மைதரும் ஏற்பாடா? இல்லை! இந்தக்
கோளாறு தீராத வரைக்கும், நாட்டுக்
குறிக்கோள்கள் அத்தனையும் கேலிக் கூத்தே!


'என்னிடத்தில் உள்ளதெல்லாம் எனக்கே! உன்பால்
இருக்கின்ற தும்கூட எனக்கே' என்னும்
கன்னக்கோல் தத்துவத்தால் ஒருமைப்பாடு
கட்டாயம் வாராது. பசித்த ஓநாய்
முன்னிருக்கும் வெள்ளாட்டைக் கொன்று தின்று
முடித்தபின்னர், அவ்வாடும் நானும் இன்றைக்(கு)
ஒன்றுக்குள் ஒன்றானோம்; ஐக்கி யத்தில் |
ஒன்றிவிட்டோம் என்றுரைத்தால் ஒப்பு வாரா?